சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு பந்து வீச்சாளர் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
![](https://thambattam.com/storage/2020/08/CSK-squad.jpg)
அமீரகத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஒருவர் உட்பட அணியில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு ஒலிம்பிக், உலக கோப்பை கிரிக்கெட் உள்ள்ளிட்ட பல விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் பிரபல ஐபிஎல் போட்டிகள் தொற்று பரவல் காரணமாக அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. இதற்காக அதில் பங்கேற்கும் அணிகள் அமீரகம் கிளம்பிச் சென்றுள்ளன.
தோனி, ரெய்னா உள்ளிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதியன்று துபாய்க்கு கிளம்பிச் சென்றனர். அங்கு 6 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு பிறகு இன்று பயிற்சியை தொடங்க திட்டமிடப்பட்டது. இந்நிலையில் சென்னை அணி வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சமீபத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
![](https://thambattam.com/storage/2020/08/CSK-Departure-UAE_571_855-300x200.jpg)
இதனையடுத்து சென்னை அணியின் ஊழியர்கள் 12 பேருக்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டது. பந்துவீச்சாளர் ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. (இவர் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார் என்று கூறப்படுகிறது) கொரோனா உறுதியானவர்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
வீரர் உட்பட சென்னை அணியை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் தங்களின் தனிமைப்படுத்துதலை மேலும் சில நாட்களுக்கு சென்னை அணி நீட்டித்துள்ளதாகவும், தெரியவந்துள்ளது. சென்னை அணியை சேர்ந்தவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது சென்னை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நடப்பு சாம்பியன் மும்பை, கொல்கத்தா, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் உள்ளிட்ட பிற அணிகள் அனைத்தும் பயிற்சியை ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில் பயிற்சியை கடைசி அணியாக சிஎஸ்கே தொடங்கும் என தெரிகிறது.