செங்கல்பட்டு அருகே பத்திரமாக மீட்கப்பட்ட கர்நாடக சிறுமி!

பெங்களூருவில் பால் வாங்கச் சென்றபோது கடத்தப்பட்ட சிறுமி செங்கல்பட்டு அருகே பத்திரமாக மீட்கப்பட்டார்.

பெங்களூருவை சேர்ந்தவர் விநாயகம்(42) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது மகள் அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை விநாயகம் நடைபயிற்சிக்கு சென்றுவிட்டார். அவரது மகள் பால் வாங்க அருகில் உள்ள கடைக்குச் சென்றார். அப்போது வேனில் வந்த மர்ம நபர்கள் இருவர் சிறுமியிடம், ‘உனது தந்தைக்கு அடிபட்டுவிட்டது. மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்’ என்று கூறி அழைத்துள்ளனர். ஆனால், சந்தேகம் அடைந்த அந்த சிறுமி தனது தாயிடம் கூறி அவரையும் அழைத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், அந்த மர்ம நபர்கள் சிறுமியை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி உள்ளனர். அப்போது, சிறுமி கூச்சலிட அவரது வாய் மற்றும் கையை கட்டிய அந்த நபர்கள் அங்கிருந்து தமிழகத்துக்கு அழைத்து வந்துள்ளனர். பின்னர், அவரை செங்கல்பட்டு அருகே திம்மவரம் பகுதியில் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டனர். இடையில் என்ன நடந்தது என்பது உடனடியாக தெரியவில்லை. திம்மாவரம் பகுதியில் அழுது கொண்டுநின்றிருந்த சிறுமியை பார்த்த ஆட்டோ ஓட்டுநர்கள் செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் அந்த சிறுமியை மீட்டு விசாரித்தனர். அவர் தன்னை 2 பேர் அழைத்து வந்து இங்கு இறக்கிவிட்டு சென்றுவிட்டதாகவும், ஆனால் அவர்கள் தனக்கு எந்த தொந்தரவும் தரவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து குழந்தைகள் நலக் குழுமத்திடம் இந்தப் பெண்ணை ஒப்படைத்தனர். பின்னர் சிறுமியின் தந்தை விநாயகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர் நேற்று காலை வந்து தனது மகளை பெங்களூருவுக்கு அழைத்துச் சென்றார். இது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x