திருமணமான 20 நாட்களில் தற்கொலை செய்து கொண்ட கணவன்.. கழுத்தை அறுத்துக் கொண்ட மனைவி!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே திருமணமான 20 நாட்களில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவிலை சேர்ந்த விஷ்ணு, திருப்பூரை சேர்ந்த ஷாலினி ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில் 20 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் சில நாட்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இரண்டு தினங்களுக்கு முன்பு இருவருக்கும் சண்டை வந்த போது ஷாலினி தாலியை கழட்டி வீசியதாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த விஷ்ணு அறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டார். வெகு நேரமாகியும் அவர் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்துச் சென்று பார்த்த போது அவர் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஷாலினி அங்கேயே கழுத்தை அறுத்துக் கொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஷாலினி சிகிச்சை பெற்று வருகிறார். இருவருக்கும் இடையேயான பிரச்சனை குறித்து தெரியவில்லை. ஷாலினி இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு சொன்னால் தான் பிரச்சனை குறித்து தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.