“பண மதிப்பிழப்பு செய்யப்பட்டதில் இருந்துதான் பொருளாதாரச் சீரழிவு ஆரம்பம்..” – ராகுல் காந்தி

இந்தியாவின் பொருளாதாரம் ஏப்ரல் – ஜூன் காலாண்டில் 23.9 சதவீதம் பின்னடைவைச் சந்தித்துள்ளது என திங்கள்கிழமை வெளியான புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்தது.
இதைக் குறிப்பிட்டு ராகுல் காந்தி சுட்டுரையில் மத்திய அரசை தாக்கி வெளியிட்ட பதிவில், ‘பண மதிப்பிழப்பு செய்யப்பட்டதில் இருந்தே பொருளாதாரச் சீரழிவு தொடங்கிவிட்டது. அதன் பின்னா் மத்திய அரசு தொடா்ந்து தவறான திட்டங்களை அடுத்தடுத்து அமல்படுத்தியது’ என்று கூறியுள்ளாா்.
அதேபோல் காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா, “இந்தியப் பொருளாதார சரிவுக்கு மத்திய பாஜக அரசுதான் காரணம். இந்திய பொருளாதாரம் சுனாமி போன்ற தாக்குதலுக்கு உள்ளாகப் போகிறது என ஆறு மாதங்களுக்கு முன்பு ராகுல் எச்சரித்திருந்தாா்.. அரசு பல்வேறு கடன் திட்டங்களை அறிவித்த பின்பும் நிலைமை மோசமாக உள்ளது” என்றாா்.
காங்கிரஸ் தலைமை செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா தனது சுட்டுரையில், ‘பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டியின் முறையற்ற அமலாக்கம், பொது முடக்கம் உள்ளிட்டவற்றை பிரதமா் மோடி அதிரடி நடவடிக்கைகள் என கூறி வந்தாா். உண்மையில் அவை பேரிடா் நடவடிக்கைகளாகும்’ என்று பதிவிட்டுள்ளாா்.