விஜயகாந்த் காலில் விழும் அரசியல் தலைவர்கள்… சர்ச்சைக்குரிய கார்ட்டூனை அவசரமாக நீக்கிய எல்.கே.சுதீஷ்

விஜயகாந்த் நடுவில் நிற்க, தமிழக அரசியல் தலைவர்கள் காலில் விழுந்து கும்பிடுகிற கார்டூனை பேஸ்புக்கில் பகிர்ந்த தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், சில மணி நேரங்களில் அதனை நீக்கியுள்ளார்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சு வார்த்தை இப்போதே அரசல் புரசலாக ஆரம்பித்து விட்டன. திமுக, அதிமுக என இருபெரும் கட்சிகளின் தொண்டர்களிடத்தில் கூட்டணி குறித்து இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
தேர்தல் களம் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “தற்போது அதிமுக – பாஜக கூட்டணியில் இருக்கிறது தேமுதிக. ஆனால், ‘கருணாநிதி, ஜெயலலிதா என இரு பெரும் தலைவர்கள் இல்லாததால் ஏற்பட்ட வெற்றிடத்தை கேப்டன் ஒருவரால் மட்டுமே நிரப்ப முடியும். தொண்டர்களின் விருப்பம் வரும் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்பதே. ஆனால், தை மாதத்தில் செயற்குழு, பொதுக்குழுவைக் கூட்டி கேப்டன் அவர்கள் நல்ல முடிவை அறிவிப்பார். அ.தி.மு.க உள்ளிட்ட பல கட்சிகளிலும் உட்கட்சிப் பூசல் இருக்கிறது. இந்நிலையில், மக்கள் எடுக்கும் முடிவே ஆட்சியைத் தீர்மானிக்கும். நிறையும் குறையும் கலந்த ஆட்சியாக அ.தி.மு.க ஆட்சி உள்ளது. . ரஜினி, கட்சி ஆரம்பித்த பின்புதான் அவருடன் கூட்டணியா என்பது குறித்து கருத்து சொல்ல முடியும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், தனது முகநூல் பக்கத்தில் கார்ட்டூன் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் விஜயகாந்த் நடுவில் நிற்க, மஞ்சள் துண்டு தோளில் போட்டவர் (திமுக), கறுப்பு சட்டை போட்டவர், ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் உள்ளிட்ட நிறைய பேர் விஜயகாந்தை சுற்றி, கீழே விழுந்து கும்பிடுகிறார்கள். இந்த கார்ட்டூனைப் பார்த்த திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகள் தொண்டர்கள் வெகுண்டனர். கடும் எதிர்ப்பு கிளம்பியதால், தற்போது சுதீஷ் இதனை நீக்கியுள்ளார்.