செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த கல்லூரிகள் முடிவு செய்து கொள்ளலாம் – கே.பி. அன்பழகன்!

பல்கலைக்கழக, கல்லூரி இறுதிப் பருவத் தேர்வுகள் ஆன்லைன் மூலமும் நடத்தப்படும் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக கல்லூரி மாணவர்களுக்கு உள்ள செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் தமிழக அரசு ரத்து செய்தது. அதில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு கடைசி செமஸ்டர் பருவத்தேர்வு மட்டும் கண்டிப்பாக நடைபெறும் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். மேலும், அரியர் தேர்வுகள் எழுத கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக முதல்வர் அறிவித்தார்.
இதற்கிடையே, இரண்டு நாட்களுக்கு முன்னதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், உயர் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டுவரும் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் பயிலும் மாணவர்கள் மற்றும் பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான இறுதிப் பருவத் தேர்வு செப்டம்பர் 15ம் தேதிக்குப் பிறகு நடத்தப்படும் என்றும், இறுதிப் பருவத் தேர்வுகள், மாணவர்கள் நேரில் வந்து எழுதக்கூடிய தேர்வாக ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
ஆனால், கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், மாணவர்கள் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்த நிலையில், அமைச்சர் கே.பி. அன்பழகன் செய்தியாளர்களிடம் பேசினார். அதில், “பல்கலைக்கழக, கல்லூரி இறுதிப் பருவத் தேர்வுகள் ஆன்லைன் மூலமும் நடத்தப்படும். ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் தேர்வு தொடர்பாக அந்தந்தப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளே முடிவு செய்துகொள்ளலாம். தமிழகத்தில் மாணவர்கள் தாங்கள் இருக்கும் இடத்துக்கு அருகே உள்ள மையத்தில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிமாநில, வெளிநாட்டில் வசிக்கும் மாணவர்களுக்காக ஆன்லைன் வழியில் தேர்வுகள் நடத்தப்படும். பிற மாணவர்களுக்கு ஆஃப்லைன் வழியில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.
தனிமைப்படுத்தல் முகாம்களாகச் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் தேர்வுகள் நடத்தப்படக்கூடாது. இதற்குப் பதிலாகப் பிற கல்லூரிகளில் தேர்வு மையம் அமைக்கலாம். இதற்கான விரிவான தேர்வு அட்டவணை மற்றும் தேர்வு மையங்கள் விரைவில் வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.