“உலகில் பத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்றியிருக்க வாய்ப்பு” – உலக சுகாதார நிறுவனம்

உலகில் பத்தில் ஒருவரை கொரோனா கிருமி தொற்றி இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் உலக மக்கள்தொகையில் பெரும்பகுதியினர் கிருமித்தொற்றால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பதாக அது கூறி உள்ளது.
தென்கிழக்காசியாவின் ஒரு சில பகுதிகளில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதை உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகாலத் திட்டங்களுக்கான நிர்வாக இயக்குநர் மைக் ரயன் சுட்டினார்.
ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியிலும் கிருமித்தொற்றுச் சம்பவங்களும் மரணங்களும் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக நேற்று முன்தினம் அவர் சொன்னார்.
“உலக மக்கள்தொகையில் ஏறத்தாழ 10 விழுக்காட்டினரை கிருமி தொற்றி இருக்கலாம் என நாங்கள் கணிக்கிறோம். நாட்டிற்கு நாடு இந்த நிலை வேறுபட்டிருக்கலாம். கிராமப்புற, நகர்ப்புறப் பகுதிகளுக்கு இடையேயும் நிலை மாறுபட்டிருக்கலாம்.
“என்றாலும், கொரோனா கிருமித்தொற்றால் உலகில் பெரும்பாலானோர் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளனர். நாம் சிரமமான காலகட்டத்தை எதிர்நோக்குகிறோம். கிருமிப் பரவல் தொடர்ந்து நீடிக்கிறது,” என்றார் டாக்டர் ரயன்.