“ஜே.இ.இ. மெயின் தேர்வை இதுவரை 1,14,563 பேர் எழுதவில்லை” – வெளியான அதிர்ச்சி தகவல்!
![](https://thambattam.com/storage/2020/09/p73ou5vg_exam-hall-_625x300_14_February_20.jpg)
பலத்த எதிர்ப்புகளுக்கிடையே நடைபெற்று வரும் ஜே.இ.இ. மெயின் தேர்வை இதுவரை 1,14,563 பேர் எழுதவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர நடத்தப்படும் ஜே.இ.இ. மெயின் தேர்வு பலத்த எதிர்ப்புகளுக்கிடையே கடந்த செப்டம்பர் 1ம் தேதி தொடங்கியது. வரும் 6ம் தேதி வரை நாடு முழுவதும் 12 கட்டங்களாக 660 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.
6 நாட்கள் நடைபெறும் தேர்வை எழுத மொத்தமாக 9 லட்சத்து 53 ஆயிரத்து 473 பேர் பதிவு செய்திருந்த நிலையில், முதல் மூன்று நாட்களில் 4 லட்சத்து 58 ஆயிரத்து 521 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜே.இ.இ. மெயின் தேர்வின் வருகை பதிவேடு விவரங்களை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
![](https://thambattam.com/storage/2020/09/EhADLgmU0AEI4o8-e1599198738466-300x108.jpg)
அதில், தேர்வு தொடங்கிய முதல் நாளான செப்டம்பர் 1ம் தேதி 63 ஆயிரத்து 366 பேர் மட்டுமே தேர்வு எழுதியதாகவும், 50 ஆயிரத்து 881 பேர் தேர்வு எழுத வரவில்லை என்றும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, செப்டம்பர் 2ம் தேதி நடைபெற்ற தேர்வை 32 ஆயிரத்து 978 பேர் எழுதவில்லை என்றும், நேற்றைய தினம் நடைபெற்ற தேர்வை 30 ஆயிரத்து 704 பேர் எழுதவில்லை என்றும் தெரியவந்துள்ளது. மொத்தமாக கடந்த மூன்று நாட்களில் 1,14,563 பேர் தேர்வை எழுதவில்லை என்பது ரமேஷ் போக்ரியால் வெளியிட்டுள்ள தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.