“காதலால் தற்கொலை நடப்பதால் காதலை தடை செய்ய முடியுமா?” மாணவர்கள் தற்கொலை குறித்து எச்.ராஜா பதில்!

ஆன்லைன் பாடம் நடத்துவது புரியாமல் மாணவர்கள் தற்கொலைகள் செய்வது குறித்து கேட்டபோது, காதலால் தற்கொலை நடப்பதால் காதலை தடை செய்ய சொல்ல முடியுமா?’ என்று செய்தியாளர்களிடம் பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கேட்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. வழக்கம் போல தற்போது அதிமுகவுடனும் திமுகவுடனும் எந்தெந்த கட்சிகள் கூட்டணி அமைக்கும் என கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவுடன் பாஜகவும், தேமுதிகவும் கூட்டணி அமைக்கும் என்றாலும், தற்போது பாஜகவும் அதிமுகவும் கருத்து வேறுபாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
விநாயகர் சிலை, இ பாஸ் உள்ளிட்ட விவகாரங்களால் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக தகவல் வெளியானது.. ஆனால் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் எந்த பிரச்னையும் இல்லை என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார். அனால் பாஜக தேசிய செயலர் ஹெச் ராஜாவுக்கும், அதிமுக அமைச்சர்களுக்கும் மோதல் ஏற்பட்டு வருகிறது.
இதனிடையே, பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா மதுரையில் இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது ‘‘பா.ஜனதா டெல்லிக்கு மட்டுமல்ல, தமிழகத்திலும் ராஜாதான். பா.ஜனதா கூட்டணியில்தான் அதிமுக உள்ளது. கோவிலை அழிக்கும் துறையாக இந்து சமய அறநிலைத்துறை செயல்பட்டு வருகிறது. மேலும், ஆன்லைன் பாடம் நடத்துவது புரியாமல் மாணவர்கள் தற்கொலை குறித்து கேட்டபோது, காதலால் தற்கொலை நடப்பதால் காதலை தடை செய்ய சொல்ல முடியுமா?’’ என்றார்.