கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்!

கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பதனம் திட்டா மாவட்டத்தில் வசிக்கும் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. இதனை அடுத்து நேற்று இரவு அவரை மருத்துவமனை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் யாரும் இல்லாத பகுதியில் ஆம்புலன்ஸை நிறுத்திய அதன் ஓட்டுநர், கொரோனா பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனால் செய்வதறியாது திகைத்த அந்த பெண் மருத்துவமனையை அடைந்ததும் மருத்துவ ஊழியர்களின் மூலம் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆம்புலன் ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து தெரிவித்துள்ள பதனம்திட்டா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே ஜி சைமன், “குற்றம்சாட்டப்பட்ட நபர் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் மாநில சுகாதாரத் துறையின் 108 ஆம்புலன்ஸ் சேவையின் ஒரு பகுதியாக இருந்துவருகிறார். 2019 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில் அந்த நபர் ஒரு குற்றவாளி” என்று தெரிவித்தார்.