“புதிய கல்விக் கொள்கை, இந்தியாவின் விருப்பங்களையும், நம்பிக்கைகளையும் பூர்த்தி செய்யும்!” பிரதமர் மோடி!

புதிய கல்விக் கொள்கை புதிய இந்தியாவின் எதிர்பார்ப்புகளையும், புதிய நம்பிக்கைகளையும் பூர்த்தி செய்யும் என்று கல்வி அமைச்சகம் நடத்தி வரும் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.
செப்டம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இணைய வழி மூலமாக, இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் பள்ளி கல்வியை பற்றிய இரண்டு நாள் மாநாட்டை கல்வி அமைச்சகம் நடத்தி வருகிறது. தேசிய கல்விக் கொள்கையில் பள்ளி கல்வி குறித்து உள்ள சில முக்கிய அம்சங்களை தெளிவுபடுத்துவதற்காக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் இரண்டாவது நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இந்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார்.
மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: “புதிய கல்விக் கொள்கை புதிய இந்தியாவின் எதிர்பார்ப்புகளையும், புதிய நம்பிக்கைகளையும் பூர்த்தி செய்யும். நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கையை முழுமையாக திறன்பட அமல்படுத்த வேண்டும். இதனை நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்வோம். புதிய கல்விக் கொள்கையை பல்வேறு தரப்பினரும் கடந்த 4 முதல் 5 ஆண்டுகளாக செயலாற்றி உருவாக்கியுள்ளனர். இது ஒரு தொடக்கம் தான். இதனை திறன்பட அமல்படுத்தும்போது தான் முழுமையான பயன் கிடைக்கும். பள்ளிக்கு முந்தைய கல்வி என்பது நமது குழந்தைகளுக்கு புதிய அனுபவம். எனவே குழந்தைகள், ஈடுபாட்டுடன் பள்ளிக்கு முந்தைய கல்வியை தொடங்க வேண்டும்.” இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.