பிரியாணி மற்றும் பரோட்டா சாப்பிட்ட சிறிது நேரத்தில் கடுமையான வயிற்று வலியால் பலியான சிறுவன்!

பிரியாணி மற்றும் பரோட்டா சாப்பிட்ட சிறிது நேரத்தில் 12 வயது சிறுவனுக்கு திடீரென ஏற்பட்ட கடுமையான வயிற்று வலி காரணமாக இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை துரைப்பாக்கம் ஆர்.இ.நகரைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் தினேஷ். ஏழாம் வகுப்பு மாணவரான தினேஷ், நேற்று இரவு பிரியாணி மற்றும் பரோட்டா சாப்பிட்டுள்ளான். உணவு அருந்திய சிறிது நேரத்தில் சிறுவனுக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து பெற்றோர் சிறுவனை அழைத்து சீவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பார்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பிய பின்னர் சிறிது நேரம் கழித்து சிறுவனுக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து தினேஷை அவரது பெற்றோர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
எனினும் சிறுவன் வழியில் மயங்கியதால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சிறுவனை மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே தினேஷ் உயிரிழந்துவிட்டதாக கூறினர். இதனால் மருத்துவமனையில் கூடிய உறவினர்கள் கூடினர். பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்டோர் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.
இதனிடையே சிறுவன் உயிரிப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர். சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே, இறப்புக்கான உண்மைக் காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.