பேனர்கள் விழுந்து ரசிகர்கள் இறந்தால் சினிமாவையே தடை செய்யனுமா? நடிகை காயத்ரி ரகுராம் கேள்வி!

பேனர்கள் விழுந்து ரசிகர்கள் இறந்தால் சினிமாவையே தடை செய்துவிட வேண்டுமா? என்று நீட் தேர்வுக்கு எதிரான நடிகர் சூர்யாவின் அறிக்கைக்கு பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் பதில் அளித்துள்ளார்.
இதுவரை நீட் தேர்வு பயத்தில் 12 பேர் தமிழகத்தில் உயிரிழந்த நிலையில், நடிகர் சூர்யா இதுகுறித்து அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “நீட்தேர்வு பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. கொரோனா காலத்தில்கூட மாணவர்கள் தேர்வு எழுதிதான் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவதுதான் வேதனை.
நீட் போன்ற மனுநீதி தேர்வுகள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது. உயிருக்கு பயந்து காணொளி காட்சி மூலம் வழக்குகளை நடத்துகின்ற நீதிமன்றங்கள் கூட மாணவர்களை பயப்படாமல் தேர்வெழுத போகச் சொல்கிறது. சாதாரண குடும்ப பிள்ளைகளின் மருத்துவர் கனவில் தீ வைக்கும் நீட் தேர்வுக்கு எதிராக குரல் எழுப்புவோம். ” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சூர்யாவின் அறிக்கைக்கு பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் பதிலளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “விருப்பமான நடிகரின் திரைப்படம் வெளியாகும் போது, முதல் நாள் முதல் காட்சிக்காக ரசிகர்கள் பேனர்கள் வைக்கிறார்கள். பேனர்கள் விழுந்து ரசிகர்கள் இறந்துவிடுகிறார்கள். ரசிகர் மன்றத்தில் பணத்தை செலவு செய்து உயிரிழந்தும் விடுகிறார்கள். அதற்காக சினிமாவையே தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுப்போமா? எந்த ஒரு லாஜிக்குமே இல்லை தானே?
தேர்வுகளை மாணவர்கள் தைரியமாக எதிர்கொள்வதற்கு ஊக்கப்படுத்துங்கள். மருத்துவர்கள் ஒவ்வொரு நாளும் நோயாளிகளைப் பார்ப்பதும் கூட தினந்தோறும் தேர்வு எழுவதைப் போலத்தான்” என்று கூறியிருக்கிறார். காய்த்ரி ரகுராமின் இந்த பதில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்துள்ளது.