“பிரதமர் மோடி மயில்களுடன் பிஸியாக இருப்பதால் நம்மை நாமே தற்காத்துக் கொள்ள வேண்டும்!” ராகுல் காந்தி!

பிரதமர் மோடி மயில்களுடன் பிஸியாக இருப்பதால் நம்மை நாமே தற்காத்துக்கொள்ளவேண்டும் என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். இதுவரை 48 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ள நிலையில், 79 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், 37 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிப்படைந்துள்ள நாடுகளின் பட்டியலில் முதலில் 10ம் இடத்தில் இருந்த இந்தியா, பின்னர் படிப்பட்டியாக முன்னேறி தற்போது 2ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனால், அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் மத்திய அரசை குற்றம்சாட்டி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, பிரதமர் மோடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தோல்வி எனவும் கூறிவந்தார். இந்த நிலையில், இன்று ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், “இந்தியாவில் கொரோனா பாதிப்பு இந்த வாரம் 50 லட்சத்தை கடந்துவிடும். ஒருவரது ஈகோவின் காரணமாக திட்டமிடப்படாத பொதுமுடக்கம் அமல்படுத்தபட்டது. அதனால், இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவியுள்ளது. யாருடைய உதவியும் இன்றி தனித்து செயல்படுங்கள் என மோடி அரசு கூறுகிறது. அதாவது, பிரதமர் மோடி மயில்களுடன் பிசியாக இருப்பதால் உங்களை நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.