‘விருப்பமில்லாவிட்டால் கட்சியை விட்டுப் போகலாம்’ ராகுல் திட்டவட்டம்

‘காங்கிரஸ் கட்சியிலிருந்து விலக வேண்டும் என யார் விரும்பினாலும் அவர்கள் செல்லலாம்’ என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் இடையே மோதல் ஏற்பட்டது. ஆட்சியை கலைப்பதற்காக, சச்சின் பைலட் பல்வேறு சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து, துணை முதல்வர் பதவியில் இருந்தும், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும் சச்சின் பைலட் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து சச்சின் பைலட், பா.ஜ.க வில் இணைவார் என தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவலை சச்சின் பைலட் திட்டவட்டமாக மறுத்து விட்டார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின், இந்திய மாணவர் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகளிடம் ராகுல் காந்தி பேசியது: “காங்கிரஸ் கட்சியில் இருந்து யாரும் விலக நினைத்தால், அவர்கள் விலகலாம். அதனால் என்ன? உங்களை போன்ற இளம் தலைவர்களுக்கு, காங்கிரஸ் கட்சியின் பதவிக்கான கதவுகள் திறந்தே உள்ளன.” என்று அவர்களிடம் கூறினார்.
இதனிடையே, தற்போதைய பிரச்னை குறித்து வெளிப்படையாக கருத்து எதையும் தெரிவிக்க வேண்டாம் என அசோக் கெலாட்டிற்கு காங்கிரஸ் மேலிடம் கட்டுப்பாடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.