கோழியை வைத்து கோடிக்கணக்கில் ஏமாற்றிய தாய் மற்றும் மகனுக்கு 10 ஆண்டுகள் சிறை!!

நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தில் அதிக தருவதாகக் கூறி 76 பேரிடம் ரூ.1.15 கோடி மோசடி செய்த தாய், மகனுக்கு தண்டனை விதித்து கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலப் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்) தீர்ப்பளித்துள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர், காமராஜ் நகரைச் சேர்ந்த எஸ்.கே.கணேசன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் முகேஷ், மனோஜ்குமார் ஆகியோர் இணைந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே விஜயமங்கலம்- திங்களூர் சாலையில் ராஜ ராஜேஷ்வரி பவுல்டரி, ஸ்ரீ ராஜ ராஜேஷ்வரி பவுல்டரி என்ற பெயரில் 2 நிறுவனங்களை 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியுள்ளனர்.

பின்னர், தங்களிடம் ரூ.1 லட்சம் செலுத்தி 375 நாட்டுக் கோழிக் குஞ்சுகளை வாங்கிக்கொண்டால், அவற்றைப் பராமரிக்கக் கொட்டகை அமைத்துக் கொடுத்து, தீவனம் ஆகியவற்றை அளிப்போம். திட்டத்தில் இணைந்தபிறகு மாதந்தோறும் பராமரிப்புத் தொகையாக ரூ.7 ஆயிரம் அளிப்பதோடு, ஆண்டு போனஸாக ரூ.8 ஆயிரம், திட்டக் காலமான 3 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு ரூ.1 லட்சத்தைத் திருப்பி அளித்துவிடுவோம் எனக் கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்துள்ளனர்.

இதை நம்பி 76 பேர் மொத்தம் ரூ.1.15 கோடியை முதலீடு செய்துள்ளனர். பின்னர், உறுதி அளித்தபடி பராமரிப்புச் செலவு, போனஸ் போன்றவற்றைக் கோழி வளர்ப்பு நிறுவனம் அளிக்கவில்லை. இதையடுத்து, 2012 டிசம்பரில் பவானியை அடுத்த குப்பாண்டம்பாளையத்தைச் சேர்ந்த நாச்சிமுத்து என்பவர் ஈரோடு பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார். பின்னர், உரிமையாளர்கள் 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இதில், எஸ்.கே.கணேசன் வழக்கு விசாரணையின்போது உயிரிழந்துவிட்டார்.

இந்த வழக்கு விசாரணை, கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) நடைபெற்று வந்த நிலையில், விசராணை முடிவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், நிறுவனத்தின் உரிமையாளர்களான மல்லிகா, ஆகியோருக்கு தண்டனை, ரூ.75 லட்சம் அபராதம் விதித்த சிறப்பு நீதிபதி ஏ.எஸ்.ரவி, தீர்ப்பு வழங்கும்போது இருவரும் நேரில் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான மனோஜ்குமார் மீது சிறார் நீதிமன்றத்தில் தனியே வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x