கிரெடிட் கார்டு வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை..!

இன்றைய காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் கிரெடிட் கார்டு பயன்பாடுகள் அதிகரித்துள்ளது. இதில் கிரெடிட்கார்டுகளை தவறாகப் பயன்படுத்தும் போது நீங்கள் அதிக அளவில் வட்டி செலுத்தவேண்டி வரும். தவறாகப் பயன்படுத்தி பலரும் சங்கடத்திற்கு உள்ளானதைக் கேள்விப்பட்டிருப்போம்.
பொதுவாக கிரெடிட் கார்டினை பயன்படுத்தி பலன் அடைந்தவர்களை விட, அதனால் பிரச்சனையை சந்தித்திவர்கள் தான் அதிகம். ஆனால் அவற்றை சரியாக பயன்படுத்தினால், பல நன்மைகள் உள்ளன.
கிரெடிட் கார்டினை முதல் முறையாக பயன்படுத்தும் முன் கவனிக்கவேண்டிய சில விசயங்களைப் பார்ப்போம்.
கிரெடிட் கார்டு வாங்கும் முன் முதலில் வருடாந்திரக் கட்டணம் எவ்வளவு என்பதைப் பார்க்கவேண்டும். குறைந்த வருடாந்திரக் கட்டணம் உள்ள கார்டுகளை தேர்வு செய்யவேண்டும்.
மேலும், மிகவும் முக்கியமான விசயம் என்னவென்றால் எக்காரணத்தைக் கொண்டும் கிரெடிட் கார்டில் இருந்து பணத்தை எடுக்கக் கூடாது. ஏனெனில் அதற்கு அதிகளவிலான கட்டணம் வசூலிக்கப்படும். அதோடு கடனை கட்டாமல் சிக்கலில் மாட்டிக் கொண்டால், பின்னர் சிபில் ஸ்கோர் பாதிக்கப்படும்.
கிரெடிட் கார்டு பில் செலுத்தும் போது சிலர் முழுக்கட்டணத்தையும் செலுத்த முடியவில்லை என்றால், குறைந்தபட்ச தொகையை மட்டும் செலுத்துவார்கள். மீதமுள்ள தொகைக்கு கிரெடிட் கார்டு நிறுவனம் வட்டிக்கு வட்டி போட்டு வசூலிக்கும். புதிய கார்டு வாங்கும்போது கடனுக்கான வட்டி எவ்வளவு என தெரிந்து கொள்ள வேண்டும்.