“நீட் தேர்வில், 90% கேள்விகள் மாநில பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டது!” அமைச்சர் செங்கோட்டையன்!!

நீட் தேர்வில் தமிழக பாடத் திட்டத்தில் இருந்து 196 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கரூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, “நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் இருந்துதான் 90% கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. நீட் தேர்வில் தமிழக பாடத் திட்டத்தில் இருந்து 196 கேள்விகள் கேட்கப்பட்டன. தமிழக அரசின் பாடத் திட்டத்தின் தரத்தை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

குழு அறிக்கையின் அடிப்படையில் தமிழக பாடத்திட்டங்கள் 40% குறைக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும். கல்வித் தொலைக்காட்சியில் சனிக்கிழமைகளில் 6 மணி நேரம் மாணவர்களின் சந்தேகங்கள் தீர்க்கப்படும். காலாண்டு தேர்வு குறித்து தற்போது முடிவு செய்ய முடியாது.கொரோனா நோய் தொற்று குறைந்த பின்னரே தேர்வுகள் குறித்து ஆலோசிக்கப்படும்.” என்றார்.
நீட் தேர்வில் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் இருந்து தான் அதிக கேள்விகள் கேட்கப் பட்டிருந்தன என்று மாணவர்கள் கூறிய நிலையில் 90 சதவீத கேள்விகள் மாநில பாடத்திட்டத்திலிருந்து கேட்க பட்டுள்ளதாக அமைச்சர் கூறியிருப்பது குழப்பமடைய செய்துள்ளது.