ஐபிஎல் 2020 டி20 கிரிக்கெட்:சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி….

அபுதாபி: ஐபிஎல் டி20 தொடரின் 13வது சீசன், ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) இன்று கோலாகலமாகத் தொடங்கியது. தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியுடன், கடந்த ஆண்டு 2வது இடத்தைப் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் மோதியது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, குயின்டன் டி காக் களமிறங்கினர்.
மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் களமிறங்கிய ரோகித் சர்மா(12 ரன்கள்), பியுஷ் சாவ்லா வீசிய 5வது ஓவரில் சாம் கர்ரனிடம் கேட்ச் ஆனார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஆட்ட இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. ராகுல் சாஜர்(2 ரன்கள்) மற்றும் பும்ரா(5 ரன்கள்) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனை தொடர்ந்து 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி.

இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சி.எஸ்.கே அணியின் தொடக்க வீரர்களாக வாட்சன், முரளி விஜய் களமிறங்கினர். வாட்சன் 4 ரன்னிலும், முரளி விஜய் 1 ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். சி.எஸ்.கே 6 ரன்களில் 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆனால் அம்பாதி ராயுடு மற்றும் டூ-பிளெசிஸ் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
ஒருபுறம் அம்பாதி ராயுடு அதிரடியாக விளையாட மறுபுறம் டூ-பிளெசிஸ் நிதானமாக விளையாடி 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் வைத்தனர். அம்பாதி ராயுடு 48 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் விளாசி 71 ரன்கள் குவித்து அவுட்டானார். அம்பாதி ராயுடுவின் அதிரடியான ஆட்டத்தால் சி.எஸ்.கே அணி எளிதாக வெற்றி இலக்கை எட்ட முடிந்தது.

இறுதியாக சி.எஸ்.கே 19.2 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது. புள்ளிப்பட்டியலில் வெற்றி கணக்குடன் உள்ளே நுழைந்துள்ள சி.எஸ்.கே அணி முதலிடத்தில் தற்போது உள்ளது. நாளை நடைபெறும் போட்டியில் டெல்லி கேப்பிடள்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் அணியும் மோத உள்ளன.