தனது பசுவை கொன்ற சிறுத்தையை, ஒரு வருடமாக காத்திருந்து பழிக்கு பழிவாங்கிய இளைஞர்!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் அருகே தான் வளர்த்த பசுவை கடித்து கொன்ற சிறுத்தை புலியை தோட்டத் தொழிலாளி பொறி வைத்து பிடித்து கத்தியால் குத்தி கொன்றுள்ளார்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ளது கன்னிமலை தேயிலை எஸ்டேட். இங்கு சிறுத்தைப்புலி ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. மூணாறு உதவி வனபாதுகாவலர் பி. சஜீஷ்குமார், வனச்சரகர் எஸ்.ஹரீந்திரநாத் ஆகியோர் கன்னிமலை தேயிலை தோட்ட பகுதிக்குச் சென்றனர். அங்கு சிறுத்தை ஒன்று கன்னி பொறிக்குள் சிக்கி பலத்த காயத்துடன் இறந்து கிடந்தது.

வனத்துறையினர் தேயிலை தோட்ட கூலித் தொழிலாளி குமார் (34 ) என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்தனர். விசாரணையில் தான் சிறுத்தை புலியை பொறிவைத்து பிடித்து கத்தியால் குத்திக் கொன்றதாகத் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “எனது குடும்பத்தாருடன் பாசமாக வளர்த்த பசுவை சிறுத்தைப்புலி கடித்து கொன்றுவிட்டது. எனக்கு வாழ்வாதாரமாக இருந்த பசுவை கொன்ற சிறுத்தை புலியை எப்படியாவது பிடித்து கொலை செய்யவேண்டும் என்று திட்டமிட்டேன். அது வரும் வழியில் பொறியை வைத்து கடந்த ஒரு வருடமாக காத்திருந்து, செப் 8 இல் இரவு நேரத்தில் வந்த போது நான் வைத்த பொறியில் மாட்டி இருந்தது. உடனே விரைந்து வந்து கத்தியால் குத்தி கொன்று விட்டேன்” என்று தெரிவித்தார்.