“யார் ஆட்சிக்கு வந்தாலும் ஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடி தான் பறக்கும்.. பறக்கனும்!” உதயகுமார் அதிரடி!

தமிழகத்தில் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடி தான் பறக்கும் என்றும், காவிக்கொடி பறக்காது என்றும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை எம்ஜிஆர் விளையாட்டு மைதானத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், “எதிர்க்கட்சிகள் எல்லா மசோதாக்களையும் எதிர்ப்பது போல விவசாய மசோதாவையும் எதிர்க்கின்றனர். அவர்களுக்கு என்ன புரிதல் இருக்கிறது என்று தெரியவில்லை. நவீன காலத்திற்கேற்ப விவசாயிகள் விவசாயத்தை மேம்படுத்த விவசாய மசோதா உதவும்” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் காவி கொடி பறக்கும் என எல்.முருகன் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயக்குமார், “எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோட்டையில் தேசியக்கொடி தான் பறக்கும். அந்தந்த கட்சித்தலைவர்கள் அவரவர் கொடிகளை தூக்கிப்பிடிக்க உரிமை உள்ளது. அவர்களுடைய கட்சிக்கொடியை தூக்கிப்பிடிக்கதான் அவரை தலைவராக நியமித்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.