“ஜெயலலிதாவால் தான் நாங்கள் அமைச்சரானோம், சசிகலாவால் அல்ல!” அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் தான் நாங்கள் அமைச்சரானோம், சசிகலாவால் அல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை பட்டினம்பாக்கம் சீனிவாசபுரத்தில் கட்டப்பட்ட 2 அங்கன்வாடி மையங்களை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “திமுக விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படுவது போல நாடகமாடினாலும், மக்கள் அதை ஏற்கமாட்டார்கள். காவிரி பிரச்சனைக்கு அதன் குறுக்கே கட்டப்பட்ட ஹேமாவதி அணை தான் காரணம். மத்திய அரசில் பங்கு வகித்த திமுக விவசாயம், நீர்வளத்துறை போன்ற துறைகளை கேட்டுப் பெறவில்லை, அதற்கு பதில் பணம் கொழிக்கும் துறைகளில் தான் அமைச்சர்களாக பதவி வகித்தனர். மத்திய அரசுடன் திமுக அங்கம் வகித்த 19 ஆண்டுகளும் விவசாயிகளுக்கு கருப்பு ஆண்டாகவே அமைந்தது.
அதிமுகவின் அமைச்சர்கள் அனைவரும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் தான் அமைச்சர்களாக ஆனோம். சசிகலாவால் அல்ல. முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமியும் சட்டப்பேரவை உறுப்பினர்களால் கையொப்பமிட்டு தேர்வு செய்யப்பட்டவர் தான்.” என்று தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகின்றது. அவர் வெளியானதும், அதிமுக கட்சிக்குள் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், கட்சியை சசிகலா நடத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வரவில்லை.