2 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தலைமறைவான தந்தை! 5 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறையினரால் கைது..

மதுரவாயலில் இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தலைமறைவான தந்தையை ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை மதுரவாயல் அடுத்த எம்எம்டிஏ காலனியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் வழக்கறிஞர் ரவி. கடந்த 2015 ஆம் ஆண்டு இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் அடித்த நிலையில், அக்கம் பக்கத்தினர் காவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வீட்டை உடைத்து பார்த்தனர். அப்போது ரவியின் மகள் ஐஸ்வர்ய பிரியதர்ஷினி(13), மற்றும் ஜெய கிருஷ்ண பிரபு(11) ஆகியோரின் உடல்கள் அழுகிய நிலையில் கிடந்தன.
இதனையடுத்து சம்பவம் தொடர்பாக விசாரிக்க போலீசார் ரவியை தொடர்பு கொண்டனர். ஆனால் அவரது எண்ணானது சுவிட் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து போலீசார் விசாரணையை தொடர்ந்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
காதல் திருமணம் செய்து கொண்ட ரவி, கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மனைவியுடன் கருத்து வேறுபாட்டில் இருந்துள்ளார். இதனால் ரவியின் மனைவி அவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். தனது குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்த ரவி கடுமையான பண நெருக்கடியால் அவதிப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இதனால் கடுமையான மன உளைச்சலில் இருந்த ரவி இரண்டு குழந்தைகளையும் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.
மேலும் இந்தக் கொலையை ஒரு விபத்துபோல் சித்தரிக்க நினைத்த ரவி, வீட்டில் இருந்த சிலிண்டரில் நீளமான துணியைக் கட்டிவைத்து அதில் தீயை பற்ற வைத்துவிட்டு வீட்டிலிருந்து சென்றுள்ளார்.
ஆனால் தீயானது பாதியிலேயே அணைந்து விட்டது. அவர் வெளியே சென்றதை சிசிடிவி காட்சிகளை வைத்து கண்டறிந்த போலீசார், அவரை பிடிக்க தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையைத் தொடர்ந்தனர்.
தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் ரவியின் சொந்த ஊரான திருநெல்வேலிக்குச் சென்று துப்பு துலக்கினர். அவர் அங்கு வந்து சென்றது தெரியவந்தது. இதனிடையே ரவியின் மகளின் பள்ளிச் சான்றிதழை ஒருவர் கேட்டதாக காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில் செல்போனில் பேசிய நபரை போலீசார் தொடர்ந்து பின்பற்றினர். விசாரணையில் அது ரவி என்பது தெரிய வந்தது. செல்போன் எண் மூலம் தொடர்ந்து அவரை பின்பற்றிய காவல்துறைனர் சென்னை மண்ணடியில் பதுங்கியிருந்த ரவியை கைது செய்தனர்.