ஆன்லைன் தேர்வு எழுத முடியாமல் போனவர்களுக்கு மீண்டும் தேர்வெழுத வாய்ப்பளித்த அண்ணா பல்கலை!!

தொழிநுட்ப கோளாறால் தேர்வினை முறையாக எழுத முடியாத மாணவர்ககளுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் இறுதி ஆண்டு தேர்வுகள் நடக்க இருந்தது. ஆனால், கொரோனா நோய் பரவல் அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்பட்டது. இதனால் தேர்வுகள் நடத்த முடியாமல் போனது. தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதால், தேர்வுகள் வைக்கும் வாய்ப்புகளும் குறைந்து கொண்டே வந்தது. ஆனால், இறுதி ஆண்டு மாணவர்களுக்கு தேர்வினை கண்டிப்பாக நடத்த வேண்டும் என்பதில் யுஜிசி உறுதியாக இருந்தது.
இது குறித்து நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், மாணவர்களுக்கு கண்டிப்பாக தேர்வுகள் செப்டம்பர் மாதத்திற்குள் நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் பொறியியல் மாணவர்களுக்கு தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடத்தபடும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.
அதற்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் முன்னோட்டமாக மூன்று மாதிரி தேர்வுகள் செப்டம்பர் 19, 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடந்தது. இதில் கடந்த 21ம் தேதி தொடங்கிய தேர்வில் 90 சதவீதம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக 10 சதவீதம் மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் போனது. இதனால் அவர்களுக்கு ரிசல்ட் எப்படி வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள அண்ணா பல்கலைகழகம், “21ம் தேதி ஆன்லைன் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். மேலும் மற்ற நாட்களிலும் ஆன்லைன் தேர்வில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கலந்து கொள்ளாதவர்களுக்கும் மறுதேர்வு நடத்தப்படும்” என தெரிவித்துள்ளது.