பஞ்சாப் எல்லையில் ஊடுருவல்: 5 ஊடுருவல்காரர்கள் சுட்டுக்கொலை

பஞ்சாப் மாநில எல்லை வழியாக, பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் நுழைய முயன்ற 5 ஊடுருவல்காரர்களை, எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.
பஞ்சாப் மாநிலத்தின் தார்ன் தாரனில் உள்ள சர்வதேச எல்லை அருகே, எல்லை பாதுகாப்புப் படையினர் இன்று காலை வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாகிஸ்தான் பகுதியிலிருந்து சிலர் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றதை கண்டுபிடித்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி எச்சரித்த போதும், அதை கண்டு கொள்ளாமல் ஊடுருவல்காரர்கள் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து எல்லை பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் மூலம் அங்கு நடைபெறவிருந்த ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. சம்பவ இடத்திலிருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கி ஒன்றும், 2 கைதுப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன. மேலும் அப்பகுதியில், தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக எல்லைப் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.