“கொரோனா வந்தால் மம்தா பானர்ஜியை கட்டி அணைத்துக் கொள்வேன்” பாஜக தேசியச் செயலாளரின் சர்ச்சை பேச்சு!

“கொரோனாவில் நான் பாதிக்கப்பட்டால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை அணைத்துக் கொள்வேன்” என்று பாஜக தேசியச் செயலாளர் அனுபம் ஹஸ்ரா பேசியது தற்போது சர்ச்சையாகியுள்ளது.
பாஜக சமீபத்தில் அனுபம் ஹஸ்ராவை தேசியச் செயலாளராக நியமித்தது. இந்நிலையில் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள பாரூபூரில் நேற்று பாஜக சார்பில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில் தேசியச் செயலாளர் அனுபம் ஹஸ்ரா பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், “நம்முடைய தொண்டர்கள் கொரோனாவை விட மிகப்பெரிய எதிரியான மம்தா பானர்ஜியுடன் போரிட்டு வருகிறார்கள். மம்தா பானர்ஜியுடன் முகக்கவசம் இல்லாமல் நமது தொண்டர்களால் போரிட முடியும் என்றால், கொரோனா வைரஸுக்கு எதிராகவும், நம்மால் முகக்கவசம் இல்லாமல் போரிட முடியும்.
நான் ஒரு முடிவு எடுத்திருக்கிறேன். நான் கொரோனாவில் பாதிக்கப்பட்டால், நேராக மம்தா பானர்ஜியைச் சந்தித்து அவரைக் கட்டி அணைத்துக்கொள்வேன். மாநிலத்தில் கொரோனா நோயாளியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்கு மிகவும் பரிதாபத்துகுரிய வகையில் நடக்கிறது. கொரோனாவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்படுகின்றன. உயிரிழந்தவர்களின் உறவினர்கள், மகன், மகள் பார்க்கக் கூட அனுமதியில்லை” எனத் தெரிவித்தார்.
முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து அவதூறாகப் பேசிய அனுபம் ஹஸ்ரா குறித்து சிலிகுரி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சிலிகுரியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள், ஹஸ்ராவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.
திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் சவுகதோ ராய் கூறுகையில், ‘பாஜக தலைவர்கள் வாயிலிருந்துதான் இதுபோன்ற தரமில்லாத வார்த்தைகள் வரும். இதுதான் கட்சியின் மனநிலை. இதுபோன்ற கருத்துகளை திரிணமூல் காங்கிரஸ் கண்டிக்கிறது. ஹஸ்ராவுக்கு எதிராக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விரைவாக நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளோம்’ எனத் தெரிவித்தார்.