என்.95 முககவசம் தருவதாக கூறி தனியார் நிறுவன அதிபரை ஏமாற்றிய அமெரிக்க நிறுவன அதிகாரிகள்!!

என்.95 முககவசம் தருவதாக கூறி தனியார் நிறுவன அதிபரிடம் ரூ.1¼ கோடி மோசடி செய்த அமெரிக்க நிறுவன அதிகாரிகள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெங்களூரு சிக்கபானவாரா அருகே அஞ்சேபாளையாவில் தனியார் நிறுவனம் நடத்தி வருபவர் மஞ்சுநாத். இவர், முககவசம் வாங்கி விற்க முடிவு செய்தார். அப்போது இணையதளம் மூலமாக முககவசம் விற்கும் அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் தொடர்பு கிடைத்தது. அந்த நிறுவனத்தின் அதிகாரிகளை மஞ்சுநாத் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது என்.95 முககவசம் ஒன்றை ரூ.124-க்கு மஞ்சுநாத்திடம் விற்க அந்த அமெரிக்க நிறுவன அதிகாரிகள் ஒப்புக் கொண்டார்கள்.
இதையடுத்து, ரூ.5 கோடிக்கு முககவசம் வாங்கி கொள்வதாக மஞ்சுநாத் கூறினார். இதுதொடர்பாக, மஞ்சுநாத் மற்றும் அமெரிக்க நிறுவனம் இடையே இணையதளம் மூலமாகவே ஒப்பந்தமும் போடப்பட்டது.
அந்த நிறுவன அதிகாரிகள் கூறிய வங்கி கணக்குக்கு ரூ.1¼ கோடியை முன்பணமாக மஞ்சுநாத் செலுத்தினார். ஆனால் ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து முககவசம் வரவில்லை. அதே நேரத்தில் தன்னுடன் பேசிய 3 அதிகாரிகளின் செல்போன் எண்ணுக்கு மஞ்சுநாத் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததுடன், அவர்களை தொடர்பு கொள்ளவே முடியாமல் போனது.
இதனால் ரூ.1¼ கோடியை வாங்கி மோசடி செய்துவிட்டதை அவர் உணர்ந்தார். இதுகுறித்து மஞ்சுநாத் அளித்த புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.