“இந்திய நீதித்துறை வரலாற்றில் இன்று சோகமான நாள்!” அசாதுதீன் ஓவைசி கடும் கண்டனம்!

நீதித்துறை வரலாற்றில் இன்று கருப்பு நாள் என்று ஹைதராபாத் தொகுதி மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி கருத்துத் தெரிவித்துள்ளார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை என்றும், இது திட்டமிட்ட செயல் இல்லை எனவும் நீதிபதி கே.எஸ்.யாதவ் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவரும், ஹைதராபாத் தொகுதி மக்களவை உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி, ”இன்றைய தினம் வரலாற்றில் சோகமான நாள். சதிச் செயல் இல்லை என்று நீதிமன்றம் கூறுகிறது. இதற்கு எத்தனை நாட்கள், எத்தனை மாதங்கள் தயாரிப்பு தேவைப்படும் என விளக்குங்கள். பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஆட்சியில் இருந்த பாஜக அவர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்த்தது.” எனக் கூறினார்.

”பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதமானது என்று கடந்த ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றமற்றவர்கள் என்று என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் அரசியல் லாபத்திற்காக வன்முறையை உருவாக்குபவர்கள் அவர்கள் தான். அத்வானியின் ரத யாத்திரை எங்கு நடந்தாலும். அங்கு வன்முறையும், உயிரிழப்புகளும் அரங்கேற்றப்படுகின்றன” என்று கூறினார்.
மேலும், தற்போது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக அகில இந்திய முஸ்லீம் சட்ட வாரியம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.