உத்திரபிரதேசத்தில் பணத்திற்காக நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த மருத்துவர்கள் கைது!

உத்தரபிரதேசத்தில் நீட் நுழைவு தேர்வில் மாணவர்களுக்கு பதிலாக மருத்துவர்களே ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வசூல் ராஜா படத்தில் மருத்துவ படிப்பு படிக்க நினைக்கும் ரௌடி ஹீரோ அங்குள்ள மருத்துவர் ஒருவரையே ஆள்மாறாட்டம் செய்து தேர்வுக்கு அனுப்புவார். அதுபோன்ற ஒரு சம்பவம் உத்தர பிரதேசத்தில் உண்மையாகவே நடந்துள்ளது.
உத்திரபிரதேசத்தில் பிரக்யராஜ் பகுதியை சேர்ந்த சகில் சோன்கர் என்ற மாணவர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில், டெல்லியில் உள்ள ரோகினி செக்டாரில் இருக்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளியில் அவருக்கு அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் மாணவர் சகில் சோன்கருக்கு பதிலாக, காப்பூர் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் அவத் பிகாரி என்ற எம்.பி.பி.எஸ் மருத்துவர் ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வினை எழுதியுள்ளார். மேலும், இதேபோல் அனுப் படேல் என்ற மாணவருக்கு பதிலாக சச்சின் குமார் மவுரியா என்ற எம்.பி.பி.எஸ் மருத்துவர் நீட் தேர்வு எழுதியுள்ளார்.
இந்த சம்பவத்தில் இரண்டு மருத்துவர்கள் உட்பட 7 பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.15 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
நீட் தேர்வு எழுதுவதற்காக தமிழ்நாட்டில் தாலி, மெட்டியை கூட கழற்றி வைக்க சொல்வதும், வட இந்தியாவில் அதே தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய அதிகாரிகள் ஒத்துழைப்பதும் மாணவர்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.