ஹத்ராஸ் கொடூரம் மறைவதற்குள், உ.பி.யில் வன்புணர்வு செய்யப்பட்டு உயிரிழந்த மற்றொரு பெண்!

ஹத்ராஸில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் செய்யப்பட்டு உயிரிழந்த நிலையில், அதே உ.பி-யில் மற்றொரு பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யபட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூரைச் சேர்ந்த 22 வயதான அந்த இளம்பெண்ணுக்குப் போதைப்பொருள் கொடுக்கப்பட்டு வன்புணர்வு செய்யப்பட்டிருப்பதாக  தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த சம்பவம் குறித்து பேசிய அந்தப் பெண்ணின் தாய், “என் மகள் கல்லூரி சேர்க்கைக்காகச் செல்லும் வழியில் செவ்வாய்க்கிழமை கடத்தப்பட்டார். அவள் நேரத்தோடு திரும்பவில்லை. அதன்பிறகு நாங்கள் தேட ஆரம்பித்தோம். அவள் இரவு 7 மணிக்கு ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் வீடு திரும்பினாள். அவளுக்கு போதைப்பொருள் கொடுத்து சுயநினைவை இழக்கச் செய்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். அவர்கள், எனது மகளின் காலையும் முதுகெலும்பையும் உடைத்துவிட்டனர்.

ரிக்ஷா ஒட்டுநர் தான் அவளை வீட்டில் கொண்டு வந்து சேர்த்தார். என் குழந்தையால் நிற்க, பேசக்கூட முடியவில்லை. அவள் அழுதுகொண்டே, “என்னை காப்பாற்றுங்கள். நான் உயிரிழக்க விரும்பவில்லை” என்று கதறினாள். அவள் வீடு திரும்பிவுடனே வயிறு அதிகமாக வலிப்பதாகக் கூறினாள். அதனால் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். அங்கிருந்த மருத்துவர் என் மகளின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகக் கூறி லக்னோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார். ஆனால், செல்லும் வழியில் பால்ராம்பூருக்கு அருகிலேயே என் மகள் உயிரிழந்தாள்” என்று கண்ணீருடன் கூறினார்.

பிரேத பரிசோதனை அறிக்கையில், “அப்பெண்ணின் கையில் குளுக்கோஸ் சிரிஞ்ச் ஏற்றப்பட்டதற்கான தடம் இருந்தது. அப்பெண் மோசமான நிலையில் இருந்தது போல் தெரிந்தது” என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பால்ராம்பூர் காவல்துறையோ, “போலீஸார் விரைந்து செயல்பட்டதால், இரண்டு குற்றவாளிகளும் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். ஆனால், அந்தப் பெண்ணுக்கு கை, கால்கள் உடைந்ததாக வெளிவந்த தகவல் உண்மையல்ல. பிரேத பரிசோதனை அறிக்கையில் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x