ராகுல் கைதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு இடங்களில் கைது

ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தர பிரதேசத்தில் கொல்லப்பட்ட பட்டியலின இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்கச் சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாலையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தை அடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, பிரின்ஸ் எம்எல்ஏ உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
கரூரில் பேருந்து நிலைய ரவுண்டானாவில் எம்.பி. ஜோதிமணி தலைமையில் மாவட்ட தலைவர் ஆர்.சின்னசாமி உள்ளிட்ட காங்கிரஸார் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் உருவபொம்மையை எரித்து, நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்து நிலைய ரவுண்டானா, கோவை சாலை, பழைய புறவழிச்சாலை உள்ளிட்ட சாலைகளில் ஏராளமான பேருந்துகள் நீண்ட தூரம் நின்றன.
இதையடுத்து போலீஸார் ஜோதிமணி, சின்னசாமி, 7 பெண்கள் உள்ளிட்ட 13 பேரை கைது செய்தனர். இதேபோல, ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து, திருச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அலுவலகமான அருணாச்சலம் மன்றம் முன், கட்சியின் மாநகர் மாவட்டத் தலைவர் ஜவஹர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 42 பேரை போலீஸார் கைது செய்தனர்.