இந்த வருடத்திற்குள் நடத்தப்படும் என அறிவிப்பு-TNPSC, TRB தேர்வுகள்!!!

கொரோனா தொற்று காரணமாக தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி மற்றும் டிஆர்பி தேர்வுகள் ஏப்ரல் மாதத்திலிருந்து நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் இந்த வருட இறுதிக்குள் தேர்வினை நடத்தி பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக டிஎன்பிஎஸ்சி மற்றும் டிஆர்பி பல்வேறு பதவிகளுக்கான 10 வகையான தேர்வுகளை இதுவரை நடத்த முடியாமல் இருந்து வந்தது. இதில் அரசு பள்ளியில் ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக டிஆர்பி நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வும் அடங்கும்.
கடந்த மாதம் நீட் மற்றும் JEE தேர்வுகள் நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி மற்றும் டிஆர்பி அமைப்புகளும் தங்களது தேர்வுகளை நடத்துவதற்கான பணிகளை தொடங்க உள்ளன.
ஆசிரியர் தகுதி வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் “பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணிக்கான தேர்வு, முதுநிலை ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக நடத்தப்படும் தேர்வு ஆகியவை தொற்று காரணமாக நடத்தமுடியாமல் இருந்து வருகிறது.
இந்த வருட இறுதிக்குள் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் எழுதவிருக்கும் மிகப்பெரிய தகுதித் தேர்வான ஆசிரியர் தகுதி தேர்வையும் நடத்தி முடிக்க எண்ணுகிறோம். இதுபற்றி பள்ளிக் கல்வித் துறையிடம் விரைவில் ஆலோசனை நடத்தப்படும். தொடக்க கல்வித்துறையில் கல்வி அதிகாரிகளை நியமிக்கும் பணியும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் மற்றும் கணிணி ஆசிரியர்களை நியமிக்கும் பணியும் விரைவில் நிறைவு பெறும்” என்று ஆசிரியர் தேர்வாணைய அதிகாரி கூறியுள்ளார்.

டிஎன்பிஎஸ்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த வருடம் அக்டோபர் மாதம் வரை நடத்தி முடிக்கப்பட்டு இருக்க வேண்டிய பத்துக்கும் மேற்பட்ட தேர்வுகளில் ஐந்து தேர்வுகளை மட்டுமே நடத்த முடிந்ததாகவும் அக்டோபர் மாதத்தின் மத்தியில் மாநில நீதித்துறையில் சிவில் நீதிபதி பதவிக்கான முதல்நிலை எழுத்து தேர்வை நடத்த உள்ளதாக கூறியுள்ளார்.
தொழில் மற்றும் வர்த்தகத் துறைக்கான இணை இயக்குனர் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் துறைக்கான துணைக் கண்காணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கு ஏப்ரல் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடக்கவிருந்த தேர்வுகள் விரைவில் நடத்தப்படும் என்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளுக்கான தேர்வுகளையும் விரைவில் நடத்த இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.