தங்க கடத்தல் வழக்கில் சிவசங்கர் ஐ.ஏ.எஸ்.,க்கு ஜாமின்!

கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில் அம்மாநில முதல்வரின் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கிலிருந்து ஜாமின் பெற்றுள்ளார்.
யு.ஏ.இ.,யிலிருந்து பல கோடி மதிப்பிலான தங்க கட்டிகளை தூதரக முகவரியை பயன்படுத்தி அதில் வேலை பார்த்தவர் கடத்தி வந்துள்ளார். இந்த விஷயம் கடந்த ஆண்டு வெளிச்சத்திற்கு வந்தது. இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் யு.ஏ.இ., தூதரக முன்னாள் ஊழியர் சரித் குமார் என்பவரைக் கைது செய்தனர். அளித்த தகவலின்படி, ஸவப்னா சுரேஷ் உட்பட சுமார் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்வப்னா சுரேஷுக்கும், தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளராகவும், முதல்வரின் தனிப்பிரிவு முதன்மைச் செயலாளராகவும் இருந்த சிவசங்கருக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்ததையடுத்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தங்கக் கடத்தில் வழக்குத் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் தற்போது இவ்வழக்கில் சிறையில் உள்ளார். சுங்கத்துறையினரும், என்ஐஏ அமைப்பினர், அமலாக்கப் பிரிவினர் பல முறை விசாரணை நடத்தி உள்ளனர். சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக சுங்கத்துறை, அமலாக்கப் பிரிவு தனித்தனியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் அமலாக்கத் துறையின் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கிலிருந்து அவரை கேரள உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது. இருப்பினும் டாலர் கடத்தல் வழக்கில் சுங்கத் துறை அவர் மீது வழக்கு பதிந்துள்ளதால் அவர் சிறையிலேயே இருப்பார்.