“விரைவில் தெலுங்கு மொழி பேச கற்றுக்கொள்வேன்..” – தமிழிசை நம்பிக்கை

மக்களுக்கும், அரசுக்கும் ஒரு பாலமாக செயல்படுவேன் என்றும், விரைவில் தெலுங்கு மொழியை கற்று பேசுவேன் என்றும் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறினார்.
ஹைதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் நேற்று ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் இ-அலுவலகத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் காணொலி மூலம் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் விதத்தில் தற்போது ராஜ்பவனில் இ-அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் காகிதம் கூட உபயோகிக்காமலும், சுற்றுச்சூழல் பாதிக்காமலும் அலுவலகப் பணிகள் நடைபெறும். இதனால், ராஜ்பவன் பணிகள் விரைவாக நடைபெறும்.
மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் விதத்தில் ராஜ்பவன் இனி அரசுக்கும் மக்களுக்கும் ஒரு பாலமாக செயல்படும். சமீபத்தில் கொண்டுவந்த புதிய வேளான் சட்டத்தை நான் வரவேற்கிறேன். இது விவசாயிகளுக்கு லாபகரமானது. விரைவில் நான் தெலுங்கு மொழி கற்று பேசுவேன். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.