“மக்கள் மற்றும் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இருக்கும்!” துணை முதல்வர் ட்வீட்!!

தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இருக்கும் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தங்களது ஆதரவாளர்களை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று இரவு அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, செங்கோட்டையன் ஆகியோர் தனித்தனியாக சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது, வரும் அக்டோபர் 7ம் தேதி முதல்வர் வேட்பாளர் அறிவிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இனறு மாலை 5 மணிக்கு முதல்வர் எடப்பாடி சந்தித்து பேசுகிறார்.
இந்நிலையில் துணை முதல்வர் பழனிசாமி இன்று ட்விட்டர் பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது பதிவில், “தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும்.
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!!
எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!!” என தெரிவிக்கப்பட்டுள்ளது.