“யாரும் இப்போது பாகிஸ்தானுடன், ஹத்ராஸை ஒப்பிட்டு பேசாதது ஏன்?” சிவசேனா எம்.பி. கேள்வி!!

“பாகிஸ்தானில் நடப்பது போல் தான் ஹத்ராஸில் நடந்துள்ளது, ஆனால் இப்போது யாரும் பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு ஏன் பேசவில்லை” என சிவசேனா எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தைத் தொடர்ந்து தன் டுவிட்டர் பக்கத்தில் பல்வேறு கருத்துகளை தெரிவித்து சர்ச்சைகளைக் கிளப்பிய நடிகை கங்கனா ரணாவத், மும்பை மாநகரம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் மாறியிருப்பதாக பதிவிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு சிவசேனா கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், கங்கனா ஆகியோரிடையே மோதல் அதிகரித்தது.
இந்நிலையில், மும்பையில் உள்ள கங்கனாவின் அலுவலகம் சட்ட விதிகளை மீறி கட்டியதாக மும்பை மாநகராட்சி அதிகாரிகள் இடித்தனர். இதனால், கங்கனா மற்றும் சிவசேனா இடையே பலத்த மோதல் போக்கு ஏற்பட்டது. கங்கணாவுக்கு ஆதரவாக பாஜ., குரல் கொடுத்தது. இது ஒருபுறம் இருக்க, உ.பி., மாநிலம் ஹத்ராஸில் 19 வயது இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இது குறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளான சாம்னாவில், கருத்து தெரிவித்துள்ள சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், பாஜ., மற்றும் கங்கனாவை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் அவர், “மும்பையில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கங்கனாவின் அலுவலகத்தை இடித்த பிறகு பெண்களுக்கு எதிரான அநீதி மற்றும் அட்டூழியங்கள் அதிகரித்துள்ளது என்று குரல் கொடுத்தவர்கள், ஹத்ராஸ் இளம்பெண் சட்டவிரோதமாக தகனம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு ஏன் அமைதியாக இருக்கிறார்கள்?
ஹத்ராஸ் இளம்பெண்ணுக்கு ஆதரவு கிடைக்காததற்கு காரணம், அவர் கங்கனாவை போல் சினிமா நட்சத்திரமோ, பிரபலமோ அல்ல. ஒரு குடிசையில் வாழ்ந்த சாதாரண பட்டியலினப் பெண், அந்த இளம்பெண் சட்டவிரோத கட்டடங்களை கட்டியிருந்தால் ஒருவேளை ஆதரவு குரல் கொடுத்திருப்பார்கள். பாகிஸ்தானில் நடந்தது போல் தான் தற்போது ஹத்ராஸிலும் துர்சம்பவம் நடந்துள்ளது. ஆனால் இப்போது யாரும் ஹத்ராஸை பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு பேசவில்லை. இதுபோன்ற சம்பவம், மஹாராஷ்டிராவில் நடந்திருந்தால் ஆட்சியை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சி கொண்டு வந்திருப்போம்.” இவ்வாறு அதில் கூறியுள்ளார்.