குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, அதிரடியாக களத்தில் இறங்கி வேட்டையாடிய கேரள காவல்துறை!

கேரள காவல்துறை குழந்தைகளின் ஆபாச காணொளி வெளியிடும் நபர்களை கண்டுபிடிக்க ‘பி-ஹன்ட்’ என்ற ஆபரேஷனை நடத்தி 41 பேரைக் கைது செய்துள்ளனர்.
இந்திய அளவில் பெண்களுக்கு எதிராகவும், குழந்தைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை நடந்து வருகின்றது. இதில், குழந்தைகளின் ஆபாச காணொளி மற்றும் புகைப்படங்களும் பகிரப்பட்டு வருகின்றது. குழந்தைகளின் ஆபாச காணொளி மற்றும் புகைப்படங்களைக் தயாரித்து வெளியிடுபவர்களை கண்டுபிடிக்க கேரள காவல்துறை சார்பில் கடந்த மாதம் ஆபரேஷன் ‘பி-ஹன்ட்’ என்ற பெயரில் ஒரு குழு அமைத்து விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
விசாரணைக் குழு, பல ஆதாரங்களின் அடிப்படையில் தகவல்களை சேகரித்த பின்னர், மாநிலம் முழுவதும் 326 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தியது. இந்த சோதனையில், செல்லிடப்பேசிகள், மடிக்கணினிகள், இணைய வசதிக்கு தேவையான சாதனங்கள் மற்றும் மெமரி கார்டு உள்ளிட்ட 285 மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டது.
விசாரணையில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஆபாச காணொளி மற்றும் புகைப்படங்களை வாட்ஸப், டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது தகவல் தொழில்நுட்ப (ஐ.டி) சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களுக்கு எதிரான குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) ஆகியவற்றின் கீழ் மொத்தம் 268 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்பட 41 பேரைக் கைது செய்துள்ளனர்.
மேலும் குழந்தைகளின் காணொளிகள் மற்றும் புகைப்படங்களை வெளியே பகிரும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களையும் முடக்கி உள்ளனர். இந்த ஆபரேஷனை காவல் குற்றவியல் துறை ஐ.ஜி. ஸ்ரீஜித் தலைமை தாங்கியதாக காவல் துணைத் தலைவர் மனோஜ் ஆபிரகாம் தெரிவித்தார்.