பினாமி பரிவர்த்தனையில் ஈடுபடவில்லை- ஆதாரங்களை அடுக்கும் சசிகலா
ஜெயலலிதா மரணம் வரை சசிகலா ஆஸ்பத்திரியில் இருந்தார். பிறகு கட்சிப் பணிகளில் மூழ்கி இருந்தார். அந்த நிலையில், சசிகலா எந்த பினாமி பரிவர்த்தனையிலும் ஈடுபடவில்லை என்று சசிகலா தரப்பு ஆடிட்டர்கள் கூறியுள்ளனர். ஆனால் வருமான வரித்துறை, சசிகலா பினாமி பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அதிக ஆதாரங்கள் இருப்பதாக கூறியுள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது தன்னிடம் ரூ.48.31 லட்சம் மட்டுமே மதிப்பிழப்பு செய்த நோட்டுகள் வைத்திருந்ததாக வருமான வரித்துறையிடம் சசிகலா தெரிவித்துள்ளார். அந்தப் பணத்தையும் டிசம்பர் 30, 2016 அன்றே செலுத்தி விட்டதாக அவர் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக வருமான வரித்துறை (விசாரணைப் பிரிவு) இணை இயக்குநர், பினாமி தடை வருமானவரிப்பிரிவு உதவி இயக்குநருக்கு மே 14, 2019-ல் எழுதிய கடிதத்தை தனக்கு ஆதாரமாக காட்டியுள்ளார். அந்தக் கடிதத்தில் சம்பந்தப்பட்ட ரூ.1911 கோடி ‘3வது நபருக்கு’ சொந்தமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பினாமி சொத்து பரிவர்த்தனைத் தடைச் சட்டம், 1988-ன் கீழ் நடவடிக்கைகள் எடுப்பதற்காக இணை இயக்குநர் எழுதிய அந்தக் கடிதத்தில் தங்களால் சேகரிக்கப்பட்ட ஆவணங்களின்படி சந்தேகத்துக்கு இடமான வகையில் 1674 கோடி சொத்துக்கள் வாங்குவதற்காக வைத்திருந்ததாகக் கூறப்பட்டிருந்தது.
வருமானவரித்துறை சசிகலாவிடம் ரூ.1,911 கோடி பணமதிப்பிழப்பு கரன்சி இருந்ததாகத் தெரிவித்ததையடுத்து அதனை மறுத்து தன்னிடம் மதிப்பிழப்பு செய்யப்பட்ட நோட்டுகளில் தன்னிடம் ரூ.48.31 லட்சம் மட்டுமே இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட காலத்தில் தான் வைத்திருந்த பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட நோட்டுகளை தன் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் டிசம்பர் 30, 2016 அன்றே செலுத்தி விட்டதாக அவர் கூறியிருக்கிறார்.