ஜி.எஸ்.டி. இழப்பீடு சம்பந்தமாக, 10 மாநில முதலமைச்சர்களுக்கு ஸ்டாலின் கடிதம்..

ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகையை திரும்பப் பெறுதல் சம்பந்தமாக 10 மாநிலங்களின் முதல்வருக்கு தமிழகத்தின் எதிர்க் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று(வியாழக்கிழமை) கடிதம் எழுதியுள்ளார்.

ஜி.எஸ்.டி. இழப்பீடு தொகை பெறுவதற்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, புதுச்சேரி, கேரளம், பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தில்லி, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 10 மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதிய கடிதத்தில் கூறியதாவது:

2017–18 மற்றும் 2018-19 ஆகிய ஆண்டுகளில் மட்டும் ஜி.எஸ்.டி. இழப்பீட்டுக் கணக்கில் இருந்து ரூ. 47, 272 கோடியை, சட்டத்திற்குப் புறம்பாக, இந்தியத் தொகுப்பு நிதிக்கு மத்திய அரசு மாற்றியுள்ளதை, 2018-19 நிதியாண்டுக்கான சி.ஏ.ஜி. அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. கடந்த நிதியாண்டிலும் (2019 -20) இதேபோல் சட்டத்திற்குப் புறம்பான மாற்றங்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது. இந்தத் தவறான நடவடிக்கையை மத்திய அரசு ஒப்புக் கொண்டிருப்பதாகவும், (ரூ. 47,272 கோடியை இந்தியத் தொகுப்பு நிதியில் இருந்து இழப்பீட்டு நிதியில் மீண்டும் சேர்ப்பதன் மூலம்) கூடிய விரைவில் அதனைச் சரி செய்துவிடுவதாக உறுதியளித்திருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த உண்மையின் அடிப்படையில், சி.ஏ.ஜி. அமைப்புக்கு அளித்த உறுதி மற்றும் அதன் கடமையில் இருந்து மத்திய அரசு தவறாமல், இழப்பீட்டுத் தொகையை உடனடியாகத் திருப்பிச் செலுத்துவதையும், அந்தத் தொகையில் இருந்து மாநிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்குவதையும் தாங்கள் உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். மத்திய அரசு சட்டப்படி வழங்குவதற்குத் தேவையான கூடுதல் நிதியை, சந்தையிலிருந்தோ அல்லது இந்திய ரிசர்வ் வங்கியில் இருந்தோ, அதனைத் திருப்பிச் செலுத்தும் பொறுப்பை ஏற்று, மத்திய அரசு, இழப்பீட்டுக் கணக்கிற்கு நேரடியாகக் கடனாகப் பெற்றுக் கொள்ளலாம்.

தங்களுடைய இதுவரையிலான முயற்சிகளுக்கு தமிழக மக்கள் சார்பில் பாராட்டுகளைத் தெரிவிப்பதோடு, தமிழக அரசு தன்னுடைய சொந்த மக்களுக்கு துரோகம் செய்து கொண்டிருக்கும் நிலையில், தாங்கள் உறுதியுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் உரிமைகளுக்காக மற்ற மாநிலங்களுடன் சேர்ந்து நீங்கள் நடத்தும் போராட்டம் வீண்போகாது என தெரிவித்துள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x