காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து அதிகாரபூர்வமாக நீக்கப்பட்டார் நடிகை குஷ்பூ!

பாஜகவில் சேர டெல்லி சென்றதாக தகவல் பரவிய நிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில் நடிகை குஷ்பு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
நடிகை குஷ்பூ தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். பின்னர் வாய்ப்புகள் மங்கிய நிலையில் திமுகவில் இணைந்தார். அங்கு திமுக தலைமைக்குள் குஷ்புவால் பிரச்சினை ஏற்பட்ட நிலையில் அவர் திடீரென காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸில் அவருக்கு மிக உயர்ந்த பதவியான அகில இந்திய செய்தித் தொடர்பாளர் பதவி தரப்பட்டது.
குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் அவர் அடிக்கடி பாஜக கொள்கைகளை ஆதரித்து வந்ததால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் பொது சிவில் சட்டத்தை தான் ஆதரிப்பதாக பேட்டி அளித்து மறுநாள் அது சர்ச்சையானது. அப்போதைய காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அது அவரது சொந்தக்கருத்து காங்கிரஸ் கருத்தல்ல என தெரிவித்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
சமீபத்தில் பாஜகவில் சேருவதாக தன்னைப்பற்றி ட்விட்டரில் எழுதுபவர்கள் ரூ.2 பணம் வாங்கிக்கொண்டு செய்திப்போடுகிறார்கள் என கடுமையாக சாடினார் குஷ்பூ. அதே வாரத்தில் சாத்ரஸ் பாலியல் சம்பவம் சம்பந்தமான காங்கிரஸ் கண்டனக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து பேசினார். “ராகுல் போல் தைரியமாக சம்பவ இடத்துக்கு போக துணிவிருக்கா?” என்கிற பாணியில் பேசியதால் குஷ்பு குறித்த செய்தி வதந்தி என அனைவரும் நம்பினர்.
இந்நிலையில் நேற்று திடீரென டெல்லி கிளம்பி போனார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாது என மறுத்தார். காங்கிரஸில் இன்னும் இருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு அந்தக்கேள்விக்கு பதிலளிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார். இன்று மதியம் பாஜக அகில இந்திய தலைவர் முன்னிலையில் இணைய உள்ளதாக செய்தி பரவிய நிலையில் அவரை அகில இந்திய செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து காங்கிரஸ் கட்சி நீக்கியுள்ளது.
குஷ்பு நீக்கப்பட்ட சில நிமிடங்களில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ள குஷ்பு தாம் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
அதில், “2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மிகப்பெரிய தோல்வியை அடைந்த சமயத்தில் நான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன். பணம், பெயர் அல்லது புகழுக்காக நான் காங்கிரஸில் சேரவில்லை. கட்சியின் உயர் மட்டத்திலுள்ள, கள நிலவரத்துடன் தொடர்பில்லாத மற்றும் பொது மக்களால் பெரிதும் அங்கீகரிக்கப்படாத சிலர், கட்சிக்காக உண்மையாக உழைக்க விரும்பும் தம்மை போன்றவர்களை நசுக்க விரும்புகின்றனர். இதன் காரணமாக கட்சியுடனான தொடர்பை தான் முறித்துக் கொள்கிறேன். மேலும் ராகுல் காந்தி உள்ளிட்ட அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்கிறேன்” என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் டெல்லி சென்று திரும்பிய குஷ்பு, நேற்று இரவு மீண்டும் டெல்லி கிளம்பினார். இன்று குஷ்பு, அவரது கணவர் சுந்தர்.சி உள்ளிட்ட சிலர் பாஜகவில் இணைவார்கள் என்று தெரிகிறது.