“டெல்லியில் ஜே.பி.நட்டா முன்னிலையில் நடிகை குஷ்பு பா.ஜ.க கட்சியில் இணைந்தார்..!”

நாடு முன்னோக்கிச் செல்லவும், சரியான பாதையில் கொண்டு செல்லவும் பிரதமர் மோடி போன்றவர்கள் இந்நாட்டுக்குத் தேவை. பாஜகவில் இணைந்ததில் மகிழ்ச்சி என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.
நடிகை குஷ்பு கடந்த 2010-ம் ஆண்டு திமுகவில் இணைந்தார். அங்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2014-ல் திமுகவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதன் பின்னர் காங்கிரஸ் கட்சிக்குள் பல்வேறு சர்ச்சைகள் குஷ்புவால் எழுந்தன. சமீபகாலமாக, ட்விட்டரில் காங்கிரஸ் கொள்கைக்கு எதிரான நிலைப்பாடு, பாஜக ஆதரவு கருத்துகள் சிலவற்றை குஷ்பு பதிவிட்டு சர்ச்சையில் சிக்கினார்.

இந்நிலையில், அவர் இன்று (அக். 12) பாஜகவில் இணைவதாகத் தகவல் வெளியானது. டெல்லிக்குச் சென்றுள்ள குஷ்பு, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். உடனடியாக அவர் காங்கிரஸிலிருந்து ராஜினாமா செய்து பொறுப்புத் தலைவர் சோனியா காந்திக்குக் கடிதம் அனுப்பினார்.
இந்நிலையில், இன்று மதியம், டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் குஷ்பு பாஜகவில் இணைந்தார். அப்போது, பாஜக தேசியச் செயலாளர் சி.டி.ரவி, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சம்பிட் பத்ரா, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். குஷ்புவுக்கு பாஜக தேசியச் செயலாளர் சி.டி.ரவி சால்வை அணிவித்து, பாஜக உறுப்பினர் அட்டையை வழங்கினார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், “தமிழக பாஜகவில் கடந்த 6 மாத காலமாக மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், பிரபலங்கள், பெண்கள், தொழிலதிபர்கள், பட்டியலினத்தவர்கள் பாஜகவில் சேருகின்றனர். நேர்மையான மோடி ஆட்சி தமிழகத்திலும் வேண்டும் என அவர்கள் விரும்புவதுதான் இதற்குக் காரணம். அந்த வரிசையில் குஷ்புவும் இணைந்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பேசிய குஷ்பு, “பாஜகவில் இணைவது முன்கூட்டியே எடுக்கப்பட்ட முடிவு. எதிர்க்கட்சியில் இருக்கும் போது ஆளுங்கட்சியை விமர்சிப்பது இயல்பு. நாடு முன்னோக்கிச் செல்லவும், சரியான பாதையில் கொண்டு செல்லவும் பிரதமர் மோடி போன்றவர்கள் இந்நாட்டுக்குத் தேவை. பாஜகவில் இணைந்ததில் மகிழ்ச்சி. பாஜகவில் எனக்கு அளிக்கப்பட்டுள்ள கடமைகளைச் சிறப்பாகச் செய்வேன் என நம்புகிறறேன். மாற்றம் என்பது மனிதர்களின் இயல்பு. தலைவரை கண்டுபிடிக்க முடியாத காங்கிரசால் நாட்டை எப்படி காப்பாற்ற முடியும். தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி காணும். இந்திய மக்கள் பிரதமர், பாஜக மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.