புதுச்சேரியில் சந்தேகம் தீர்த்துக்கொள்ள வகுப்பிற்கு சென்ற அரசுப் பள்ளி மாணவருக்குக் கரோனா!!

புதுச்சேரியில் பள்ளி சென்று சந்தேகம் தீர்த்துக்கொள்வது தொடர்பான வகுப்பில் கலந்துகொண்ட அரசுப் பள்ளி மாணவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, அந்த வகுப்பறை மூடப்பட்டது.

புதுச்சேரியில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளுக்காகப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கரோனா காரணமாக மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும், தனி மனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்பன போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் முதல்வரின் தொகுதியான நெல்லித்தோப்பு, காராமணிக் குப்பத்தில் இயங்கும் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்புப் பயிலும் மாணவருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த வாரம் பள்ளிக்கு வந்து வீடு திரும்பிய மாணவர், தனது வீட்டின் அருகே நடமாடும் பரிசோதனை மையத்தில் பரிசோதித்தார். அதையடுத்து அவருக்குக் கரோனா தொற்று உறுதியானது.

நேற்று (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர் இருந்த வகுப்பறைகள் மட்டும் மூடப்பட்டன. மேலும் மாணவருக்குக் கரோனா உறுதி செய்யப்பட்ட அன்று வகுப்புக்கு வந்த 2 ஆசிரியர் மற்றும் 15 மாணவர்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவும் பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதேபோல் மூடப்பட்ட வகுப்பறை முழுவதும் கிருமிநாசினி தெளித்து, சுத்தப்படுத்தி சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே இன்று 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x