கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால் விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!

கேரளத்தின் மிகப்பெரிய அணையான இடுக்கி அணை நிரம்பி வருவதால் எர்ணாகுளத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொடர் மழை காரணமாக கேரளத்தின் மிகப்பெரிய அணையான இடுக்கி அணை நிரம்பி வருகிறது. நீர்மட்டம் 2,391.04 அடியை எட்டியதை அடுத்து, எர்ணாகுளத்திற்கு நீல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நீர்மட்டம் உயரும்போது அடுத்தகட்ட எச்சரிக்கை விடுக்கப்படும்.
நீர்மட்டம் 2,398.85 அடியை எட்டும்பட்சத்தில் அணை திறந்து விடப்படும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.