துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக சென்னை தொழிலதிபர் மீது வழக்குப் பதிவு!!

இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவருக்கு துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக சென்னை தொழிலதிபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மண்ணடி ராமசாமி தெருவைச் சேர்ந்தவர் பசீர் அகமது. இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இவர் சென்னை ரெட் கிராஸ் கோனிமேடு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் கலிலூர் ரகுமான் என்பவரிடம் ரூ.3 கோடி கடன் வாங்கியதாகவும் அதில் சுமார் ரூ.1.50 கோடியைத் திருப்பிக் கொடுத்து மீதி பணத்தைக் கொடுப்பதில் பசீர் அகமது தாமதப்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள சொந்த ஊரான வீரசோழனுக்கு பசீர் அகமது வந்துள்ளார். இதை அறிந்த கலிலூர் ரகுமான் அவரது ஆதரவாளர்களுடன் வீரசோழன் வந்து பசீர் அகமதுவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து வீரசோழன் காவல் நிலையத்தில் பசீர் அகமது புகார் கொடுத்துள்ளார். கலிலூர் ரகுமான் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.