ஐபில் 2020:சபாஷ் பஞ்சாப் செம்ம கம்பேக்!!!டாப் மூன்று அணிகளை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி….

பூரன், கெயிலின் அதிரடி ஆட்டம், கட்டுக்கோப்பான பந்துவீச்சு ஆகியவற்றால் துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 38-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது. 165 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ஹாட்ரிக் வெற்றி

வெற்றிக்கு அருகே வரை சென்று தொடர் தோல்விகளைச் சந்தித்த கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் ஹாட்ரிக் வெற்றி இதுவாகும்.

பஞ்சாப் அணியின் கடந்த 3 வெற்றிகளும் புள்ளிப்பட்டியலில் இருக்கும் டாப்-3 அணிகளுக்கு எதிரானது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்பாதியில் மோசமான தோல்விகளைப் பெற்று 2-வது பாதியில் மீண்டெழுவது சிறப்பு. இதன் மூலம் பஞ்சாப் அணி 10 போட்டிகளில் 4 வெற்றி,6 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

டெல்லி அணி 10 போட்டிகளில் 7 வெற்றி, 3 தோல்வி என 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
இதுநாள்வரை ஐபிஎல் வரலாற்றில் எந்த ஒருவீரரும் செய்யாத சாதனையை ஷிகர் தவண் செய்தார். சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்த தவண், தொடர்ந்து 2-வது சதத்தை இந்தப் போட்டியிலும் நிறைவு செய்தார்.

தவண் வரலாற்று சாதனை

ஐபிஎல் வரலாற்றில் ஒருவீரர், தொடர்ந்து இரு போட்டியில் சதம் அடிப்பது வரலாற்று சாதனையாகும். ஷிகர் தவண் 61 பந்துகளில் 106 ரன்கள் சேர்த்து(12பவுண்டரி, 3 சிக்ஸ்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருது வென்றார்.

சபாஷ் பஞ்சாப்

கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியைப் பொறுத்தவரை மிகச்சிறந்த சபாஷ் தெரிவிக்கலாம். ஏற்கெனவே நடந்த முதல் லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை வெல்லும் தருவாயில் ஆட்டம் டிராவில் முடிந்து சூப்பர் ஓவர் சென்றது.

அதில் டெல்லி அணி வென்றது. ஆனால்,அந்தப் போட்டியில் பஞ்சாப் அணி வீரர் ஜோர்டான் 2-வது ரன்னை சரியாக ஓடவில்லை என்று நடுவர் தெரிவித்ததால்தான் ஆட்டம் டிரா ஆனது. ஆனால் டி ரீப்ளேயில் ஜோர்டன் சரியாகத்தான் கிரீஸில் பேட்டை வைத்து ஓடியது தெரிந்தது.

இந்த போட்டியிலும் பஞ்சாப் வெற்றி பெற வேண்டியது. ஆனால், துரதிர்ஷ்டமாக தோற்றது. ஆனால், அனைத்துக்கும் சேர்த்து நேற்று பதிலடி கொடுத்தது.

மற்ற அணிகளில் இல்லாத சிறப்பு கிங்ஸ்லெவன் அணியிடம் இருப்பது என்னவென்றால், அனைத்துப் போட்டிகளிலும் கடைசிவரை, கடைசிப்பந்துவரை போரிடும் குணம் பார்வையாளர்களை அமர்ந்து போட்டியை பார்க்க வைக்கிறது. இந்த போராட்டக் குணம் 3 முறை சாம்பியன் பெற்ற அணியிடம் கூட இல்லை.

கெயில் வருகை

அதுமட்டுமல்லாமல் 2-வது பாதியில் கெயில் அணிக்குள் திரும்பியதிலிருந்து அணியில் புதுரத்தம் பாய்ச்சியதுபோன்றும், மிகப்பெரிய பலம் இருப்பதாகவும் அணியினர் நம்புகிறார்கள். ஐபிஎல் வரலாற்றில் முதல்பாதியில் மோசமான தொடர் தோல்விகளைச் சந்தித்த ஓர் அணி மீண்டு எழுந்து தொடர்ந்து வெற்றி பெற்றுவருவது மிகவும் அரிதானது. அதை பஞ்சாப் அணி நிகழ்த்தி வருகிறது.

இளம்வீரர்கள் பிஸ்னோய், முருகன் அஸ்வின் இருவரும் சிறப்பாகப் பந்துவீசுகின்றனர். இதுதவிர ஷமியின் யார்கர், துல்லியம், கட்டுக்கோப்பான பந்துவீச்சு எதிரணிகளுக்கு அவரின் 4 ஓவர்களும் சவால்.
இந்த ஆட்டத்திலும் பஞ்சாப் வீரர்களின் கட்டுக்கோப்பான பந்தவீச்சால் கடைசி 5 ஓவர்களில் டெல்லி அணி 47 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

ஆட்டநாயகன் ஷமி?

அதிலும் ஷமி 18,20-வது ஓவர்களில் யார்கர், மேல் யார்கர் வீசி டெல்லி பேட்ஸ்மேன்களை திணறவிட்டு ஹெட்மயர், ஸ்டாய்னிஸ் விக்கெட்டுகளையும் சாய்த்தார். சிறப்பாகப் பந்துவீசிய ஷமி 4 ஓவர்கள் வீசி 28 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். உண்மையில் ஷமிக்குத்தான் ஆட்டநாயகன் விருது கொடுத்திருக்க வேண்டும்.

பேட்டிங்கில் மயங்க் அகர்வால், ராகுல் இருவரும் விரைவாக ஆட்டமிழந்தபின் பஞ்சாப் அணி நிலைகுலைந்துவிடுமோ என அஞ்சப்பட்டது. ஐபிஎல் தொடரில் கலக்கிவரும் இருவரும் நேற்று நிலைத்திருந்தால் ஆட்டம் இன்னும் வேறுவிதமாக மாறியிருக்கும்.

ஆனால், கெயில் புயல் துஷார்பாண்டேவின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடித்து ரன்ரேட்டை 10க்கு உயர்த்தி பதற்றத்தைக் குறைத்தார்.

ப்ளே ஆப்பில் பஞ்சாப்?

அடுத்துவந்த பூரனும்,மேக்ஸ்வெல் ஜோடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். அதிலும் பூரன் அருமையான இன்னிங்ஸை நேற்று விளையாடினார். அணி இக்கட்டான சூழலில் இருக்கும் போது அவரின் நிதானமான ஆட்டம் தேர்ந்த பேட்ஸ்மேன் போல் நேர்த்தியாக அமைந்தது.

கடைசி 4 ஓவர்களில் பஞ்சாப் வெற்றிக்கு 17ரன்கள் தேவைப்பட்டது. ஹூடா, நீஷம் இணைந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். நீஷம் அதிரடியாக வின்னிங் ஷாட் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை வெற்றியுடன் முடித்தார்.

ஒட்டுமொத்தத்தில் ப்ளே ஆப் சுற்றுக்கான போட்டியில் நாங்களும் இருக்கும் என்று சவால்விட்டு நாற்காலியில் அமர்ந்துள்ளது கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி.

ஹூடா15 ரன்னிலும், நீஷம் 10 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.19 ஓவர்களில் 5விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்து பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x