ஐபில் 2020:இனிமே கிளைமாக்ஸ்தான் 4 வது இடத்துக்கு போட்டிபோடும் 5 அணிகள்!!!ராஜஸ்தானை வீழ்த்தி கோதாவல இறங்கிய ஹைதெராபாத்…

துபாயில் நடைபெற்ற ராஜஸ்தான் வெர்சஸ் ஹைதராபாத் போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் டேவிட் வார்னர், ஃபீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். காயம் காரணமாக கேன் வில்லியம்ஸனுக்கு பதில் ஜேசன் ஹோல்டரும், பஸில் தம்பிக்கு பதிலாக ஷபாஸ் நதீமும் அணியில் சேர்க்கபட்டிருந்தார்கள். ராஜஸ்தான் அணியில் எந்த மாற்றங்களும் இல்லை.

ராபின் உத்தப்பாவும், பென் ஸ்டோக்ஸும் ஓப்பனர்களாக வந்தார்கள். ஓப்பனராக இறங்க ஆரம்பித்ததும் அதிரடியாக ஆரம்பித்திருக்கும் ராபின் உத்தப்பா நேற்றும் அதிரடி ஆட்டம் ஆடினார். 13 பந்துகளில் 19 ரன்கள் அடித்திருந்த நிலையில் ஓடவேண்டிய அவசியமே இல்லாமல் ஓடி ரன் அவுட் ஆனார் உத்தப்பா. சஞ்சு சாம்சன் வந்தார். வழக்கம்போல பவுண்டரிகளைப் பறக்கவிட ஆரம்பித்தார். பவர்ப்ளேவின் முடிவில் 47 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்திருந்தது ராஜஸ்தான்.

தடுமாறிக்கொண்டிருந்த பென் ஸ்டோக்ஸின் விக்கெட்டைத்தூக்க ரஷித் கான் வந்தார். அவரது முதல் ஓவரிலேயே பென் ஸ்டோக்ஸ் தூக்கியடிக்க, விஜய் ஷங்கரின் கைக்கு வந்தது கேட்ச். ஆனால், கோட்டைவிட்டார் ஷங்கர். முகமது நபிக்கு பதில் ஏன் ஜேசன் ஹோல்டரை ப்ளேயிங் லெவனுக்குள் எடுத்தார்கள் என்கிற கேள்விகளுக்கு விடை சொன்னார் ஹோல்டர். ஜேசன் ஹோல்டரின் பந்துகளைத் தொடர்ந்து சிக்ஸருக்கு விரட்ட ஆசைப்பட்டு 25 பந்துகளில் 36 ரன்கள் அடித்திருந்த சஞ்சு சாம்சன் போல்ட் ஆனார். அடுத்த ரஷீத் கானின் ஓவரில் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் ஆடிக்கொண்டிருந்த பென் ஸ்டோக்ஸ் போல்ட். 32 பந்துகளில் 30 ரன்கள் அடித்திருந்தார் பென். இங்கிலாந்துக்காக ஆடும்போது உயிரைக்கொடுத்து ஆடும் பென் ஸ்டோக்ஸின் பேட்டில் ஏனோ, ராஜஸ்தானுக்காக ஆடும்போது உயிர் இல்லாமல் போகிறது.

கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் வந்தார். 14 ஓவர்களில் 100 ரன்களைத்தொட்டது ராஜஸ்தான். பட்லர் விஜய் ஷங்கரின் பெளலிங்கில் அவுட் ஆக, திவேதியாவை இறக்காமல் ரியான் பராக்கை இறக்கியது ராஜஸ்தான். பராக்கும் ஓரளவுக்கு சமாளித்து 12 பந்துகளில் 20 ரன்கள் அடித்து அவுட் ஆனார். ஸ்மித், பராக் என இருவரின் விக்கெட்டையுமே ஜேசன் ஹோல்டர் எடுத்தார். ஹோல்டருக்கு மொத்தம் மூன்று விக்கெட்கள். நடராஜன் கடைசி இரண்டு ஓவர்களில் 29 ரன்கள் கொடுக்க, ஜோஃப்ரா ஆர்ச்சர் சிக்ஸரோடு ராஜஸ்தானின் இன்னிங்ஸை முடித்தார். விக்கெட்கள் கைவசம் இருந்தும் கடைசி 10 ஓவர்களில் 81 ரன்கள் மட்டுமே அடித்தது ராஜஸ்தான்.

155 ரன்கள் என்கிற டார்கெட்டோடு ஹைதராபாத் சேஸிங்கைத் தொடங்கியது. ஆர்ச்சர்தான் தன்னுடைய விக்கெட்டைத் தொடர்ந்து தூக்கும் திறமைசாலி எனத் தெரிந்தும் தைரியமாகக் களமிறங்கினார் வார்னர். முதல் பந்தே 151 கிமீட்டர் வேகத்தில் வந்தது. மூன்றாவது பந்து ஸ்லிப் ஃபீல்டரின் தலைக்கு மேல் போனதால் ஜஸ்ட் மிஸ். ஆனால், நான்காவது பந்தில் இரண்டாவது ஸ்லிப்பில் இருந்த பென் ஸ்டோக்ஸ் கேட்ச் பிடிக்க, வார்னர் அவுட். ஒருநாள், டெஸ்ட், டி20 என எல்லா தரப்பட்ட போட்டிகளிலும் வார்னருக்கு இதுவரை 109 பந்துகள் வீசி, இதில் 9 முறை அவுட் ஆக்கியிருக்கிறார் ஜோஃப்ரா.

2020 ஐபிஎல்லுக்கு முன்புவரை நியூ பால் பெளலர், விக்கெட் எடுக்காமல், ரன்கள் அதிகம் கொடுக்காமல் பந்துவீசுவார் என்பதுதான் ஜோஃப்ரா ஆர்ச்சரைப்பற்றிய மதிப்பீடு. ஆனால், இந்த ஐபிஎல்-ல் இந்த மதிப்பீட்டை மாற்றி எழுதிவிட்டார் ஆர்ச்சர். வார்னருக்கு அடுத்து பேர்ஸ்டோவின் விக்கெட்டையும் ஆர்ச்சரே எடுத்தார். இந்த ஐபிஎல்-ல் பவர்ப்ளே ஓவர்களில் மட்டும் 17 பந்துகளுக்கு ஒரு விக்கெட் எடுத்திருக்கிறார் ஆர்ச்சர். ஆனால், என்ன செய்ய பவர்ப்ளேவிலேயே ஆர்ச்சருக்கு இன்னொரு ஓவர் தராமல் ஸ்டோக்ஸைக் கொண்டுவந்தார் ஸ்மித். இந்த ஓவரில் மட்டும் இரண்டு சிக்ஸர்கள் அடித்தார் மணிஷ் பாண்டே.

பேர்ஸ்டோ, வார்னர் அவுட் ஆனாலும், மணிஷ் பாண்டேவும், விஜய் ஷங்கரும் களத்தில் நின்றார்கள். இந்த இருவரின் விக்கெட்டை ராஜஸ்தான் பெளலர்கள் யாராலும் தூக்கமுடியவில்லை. பவர்ப்ளேவின் கடைசி ஓவரில் கார்த்திக் தியாகின் பந்தில் இரண்டு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்தார் பாண்டே. 10 ஓவர்களின் முடிவில் 79 ரன்கள் அடித்திருந்த ஹைதராபாத் வெற்றியை நெருங்கிக்கொண்டிருந்தது. மணிஷ் பாண்டே 28 பந்துகளில் 50 ரன்கள் அடிக்க, ஜோஃப்ரா ஆர்ச்சரின் ஓவரில் மிரட்டினார் விஜய் ஷங்கர். கடைசி 30 பந்துகளில் 37 ரன்கள் அடிக்கவேண்டும் என்கிற நிலையில் ஆர்ச்சரின் முதல் மூன்று பந்துகளில் ஹாட்ரிக் பவுண்டரிகள் அடித்தார் ஷங்கர்.

50 பந்துகளில் 48 ரன்கள் அடித்திருந்த விஜய் ஷங்கர், வெற்றிக்கு 12 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே தேவை என்கிற நிலையில் பவுண்டரி அடித்து, அரை சதக் கணக்கை முடித்து ஹைதரபாத்தின் சேஸிங்கை முடித்தார். முதல் இரண்டு ஓவர்களில் வார்னர், பேர்ஸ்டோ என முக்கிய விக்கெட்டுகளை எடுத்த ஆர்ச்சருக்கு பவர்ப்ளேவில் தொடர்ந்து இன்னொரு ஓவரை ஸ்மித் கொடுத்திருந்தால் ஆட்டத்தின் போக்கு வேறுமாதிரி மாறியிருக்கலாம். நியூ பாலில் நல்ல பவருடன் பந்துவீசிய ஆர்ச்சரை சரியாகப் பயன்படுத்தத் தவறிவிட்டது ராஜஸ்தான்.

ஹைதராபாத்தின் வெற்றி ப்ளே ஆஃபுக்குள் யாரெல்லாம் நுழைவார்கள் என்கிற போட்டியை இன்னும் கடுமையாக்கியிருக்கிறது. டெல்லி, பெங்களூரு அணிகள் 10 போட்டிகளில் 7-ல் வெற்றிபெற்று 14 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களில் இருக்கின்றன. 9 போட்டிகளில் விளையாடி மும்பை 6 வெற்றிகளுடன் மூன்றாவது இடத்திலும், கொல்கத்தா 10 போட்டிகளில் 5 வெற்றியுடன் நான்காவது இடத்திலும் இருக்கின்றன. ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் 8 புள்ளிகளுடன் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் இருக்கின்றன.

இந்த நிலையில்தான் இன்று மும்பையை சந்திக்கிறது சென்னை. மும்பையை மீண்டும் சென்னை தோற்கடித்தால் நான்காவது இடத்துக்கானப் போட்டி இன்னும் கடுமையாகும்!

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x