ஐபில் 2020: முதல் அணியாக ப்ளே ஆஃப் தகுதி இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ்!!!10 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
துபாய் சார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொலார்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சாம் கர்ரானை (52) மற்ற அனைத்து வீரர்களும் மிக சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து வந்த வேகத்தில் வெளியேறியதால், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெறும் 114 ரன்கள் மட்டுமே எடுத்தது.

மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் டிரண்ட் பவுல்ட் 4 விக்கெட்டுகளையும், பும்ராஹ் மற்றும் ராகுல் சாஹர் தலா இரண்டு விக்கெட்டை கைப்பற்றினர்.
இதனையடுத்து 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களே தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 12.2 ஓவரிலேயே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்துள்ளனர். டிகாக் 46 ரன்களும், இஷான் கிஷன் 68 ரன்களும் எடுத்து இறுதி வரை களத்தில் இருந்தனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியுடனான இந்த தோல்வியின் மூலம் நடப்பு ஐபிஎல் டி.20 தொடருக்கான ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் முதல் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியுள்ளது.