திமுகவிற்கு ஆதரவாக களமிறங்கும் மறைந்த காடுவெட்டி குருவின் மகன்!!
திமுகவுக்கு ஆதரவாக மாவீரன் மஞ்சள் படை பிரச்சாரம் செய்யும் என்று மறைந்த காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் தெரிவித்துள்ளார்.
மறைந்த வன்னியர் சங்க தலைவர் குருவின் மகனும் மாவீரன் மஞ்சள்படை அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான கனலரசன் அரியலூர்மாவட்டம் காடுவெட்டியில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வன்னியர்களுக்கு 20 சதவீத உள் ஒதுக்கீடு மற்றும் காடுவெட்டி குருவுக்கு சென்னையில் சிலை அமைப்பது தொடர்பாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தோம். கோரிக்கையை ஏற்றுக்கொண்டவர், கட்சித் தலைமையுடன் பேசி நல்ல முடிவு எடுப்பதாக தெரிவித்தார்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து மாவீரன் மஞ்சள் படை பிரச்சாரம் செய்யும். தி.மு.க ஆட்சி காலத்தில் தலைவர் கலைஞர் 108 சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தார். மாவீரன் மஞ்சள் படை தேர்தலில் போட்டியிடுவது குறித்து பின்னர் தெரிவிப்போம். பாமக இருக்கும் கூட்டணியில் மாவீரன் மஞ்சள் படை ஒருபோதும் இடம் பெறாது.” இவ்வாறு அவர் கூறினார்.