அரீயர் மாணவர்களை பேரின்பத்தில் ஆழ்த்திய கொரோணா – தமிழக முதல்வருக்கு பேனர் வைத்து கொண்டாட்டம்!!!

கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கடந்த மாதம் கலை மற்றும் அறிவியல் இளங்கலை மாணவர்களுக்கு பருவத் தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டது.
இந்நிலையில், தற்போது, இறுதி ஆண்டு அரியர் தேர்வுகளைத் தவிர இதர அரியர் தேர்வுகள் ரத்துசெய்யப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ள நிலையில் மாணவர்கள் பேனர் வைத்து தமிழக முதலமைச்சரை வணங்கி வருகின்றனர்.
கொரோனா நோய்த் தொற்று பரவியதன் காரணமாக பள்ளி, கல்லூரி என அனைத்து வகை கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. மேலும், மீண்டும் தேர்வுகள் எப்போது நடக்கும் என்ற அறிவிப்பு எதுவும் வெளிவராத நிலையே நீடித்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, கல்வி நிறுவனங்களைத் திறக்கமுடியாத சூழல் நிலவி வரும் நிலையில், பெரும்பாலான கல்லூரிகளில் தேர்வுகள் ரத்து செய்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு பயிலும் மாணாக்கர்கள், பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பலவகை தொழில் நுட்பப் பட்டயப் படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு தற்போதுள்ள சூழ்நிலையில் பருவத்தேர்வு நடத்துவது குறித்து ஆராய உயர்மட்டக் குழு ஒன்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தேர்வு நடத்த இயலாத நிலை உள்ளதாக அக்குழு தன்னுடைய பரிந்துரையைத் தெரிவித்துள்ளது. அதில், முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பில் பயிலும் மாணாக்கர்களுக்கும் மற்றும் பலவகை தொழில்நுட்பப் பட்டயப் படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்குத் தேர்விலிருந்து விலக்கு அளிப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட சில அரியர் மாணவர்களால் வைக்கப்பட்ட பேனர் வைரலாகி வருகிறது. அப்படி என்னதான் அந்த பேனரில் உள்ளது தெரியுமா? வழக்கத்திற்கு மாறாக மாணவர்கள் வைத்த அந்த பேனரில் தமிழக முதலமைச்சரைப் போற்றி ‘அரியர் மாணவர்களின் அரசனே’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இறுதி பருவத் தேர்வுகளைத் தவிர பிற பருவத் தேர்வுகளுக்குக் கட்டணம் செலுத்தியுள்ள மாணவர்களுக்கு தேர்வு நடத்த முடியாத சூழ்நிலையால், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு வழிகாட்டுதலின்படி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து மதிப்பெண்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
தமிழகத்தில் கல்லூரி பருவத் தேர்வில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் பலரும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாகப் பேனர் வைத்துள்ளனர் அந்த அரியர் மாணவர்கள்.