ஐபில் 2020:கடைசி ஓவரில் கொல்கத்தாவின் ப்ளே ஆஃப் கனவை கலைத்த சென்னை…

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
துபாயில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 49வது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் நிதிஷ் ராணா அதிரடி காட்ட மறுமுனையில் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தன. ஷுப்மான் கில் 26 ரன்னிலும், சுனில் நரைன் 7 ரன்னிலும் ரிங்கு சிங் 11 ரன்னிலும் வெளியேறினர். கேப்டன் மோர்கன் 15 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.

பொறுப்புடன் விளையாடிய நிதிஷ் ராணா 61 பந்தில் 87 ரன்களை குவித்து வெளியேறினார். இதனையடுத்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 172 ரன்கள் எடுத்தது.
173 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய சென்னை அணி தொடக்க வீரர்கள் ஷேன் வாட்சன், ருதுராஜ் கெய்க்வாட் நல்ல தொடக்கத்தை அமைத்து தந்தனர். .வாட்சன் 14 ரன்கள் எடுத்திருந்தபோது, வருண் சக்ரவர்த்தி பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த அம்பத்தி ராயுடு 38 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் தோனியும் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். நன்கு விளையாடிய ருதுராஜ் 53 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதன்பின்னர் இணைந்த சாம்கரண்- ஜடேஜா ஜோடி இறுதிகட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.. கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், நாகர்கோடி சிறப்பாக வீச, முதல் 4 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கடைசி 2 பந்துகளில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட, ஜடேஜா இருபந்துகளையும் சிக்சருக்கு விளாசி 178 ரன்களை குவித்து அசத்தினார். இதன்மூலம் சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்று, சிஎஸ்கே ரசிகர்களை மகிழ்வித்தனர்.

இப்போட்டியில் 72 ரன்கள் குவித்த சென்னை அணி வீரர் ருதுராஜ்-க்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இப்போட்டியில் சிஎஸ்கேவிடம், கொல்கத்தா அணி தோற்றதன் மூலம், மும்பை அணி பிளேஆஃப் சுற்றுக்கு முதல்அணியாக தகுதி பெற்றது.